Published : 31 Oct 2019 11:05 AM
Last Updated : 31 Oct 2019 11:05 AM

'மகா', 'கியார்' புயல்களால் தற்போதைக்கு தமிழகத்துக்குப் பாதிப்பு இல்லை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

சென்னை

பருவமழையை எதிர்கொள்ள அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று (அக்.31) செய்தியாளர்களிடம் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:

"கன்னியாகுமரியில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என, மீன்வளத்துறை அறிவிப்பு கொடுத்திருக்கிறது. கன்னியாகுமரியிலிருந்து கடலுக்குச் சென்ற 7 படகுகளும், தூத்துக்குடியில் இருந்து சென்ற 5 படகுகளையும் தவிர அனைத்துப் படகுகளும் கரைக்குத் திரும்பியுள்ளன.

மேற்கூறிய 12 படகுகளில் 4 படகுகளுக்கு குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை குறித்து தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்ப அறிவுறுத்தப்பட்டு, அவர்கள் கரையை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர். மற்ற 8 படகுகளுக்கு மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் மூலமாகவும், கடற்படை, கடலோரக் காவல் படை மற்றும் பிற வணிகக் கப்பல்கள் மூலம் தகவல் தெரிவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தாழ்வான பகுதிகளில் உள்ளவர்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீர் தேங்குகின்ற இடங்களாக 4,399 பாதிக்கப்படும் இடங்களாக கண்டறிந்திருக்கிறோம். அந்த இடங்களில் நீர் உறிஞ்சும் இயந்திரங்களைக் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்படும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறோம்.

20 மி.மீ.க்கு மேலே 21 மாவட்டங்களிலும், 10-20 மி.மீ. வரை 6 மாவட்டங்களிலும், 5-10 மி.மீ. வரை 3 மாவட்டங்களிலும், 5 மி.மீ.க்குக் கீழே 2 மாவட்டங்கள் என 32 மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்யும்.

'மகா' புயல், 'கியார்' புயல் இரண்டும் ஓமன் பகுதியில்தான் சென்றுகொண்டிருக்கின்றன. இந்தப் புயல்களால் தற்போதைக்கு தமிழகத்திற்குப் பாதிப்பில்லை.

தண்ணீர் தேங்கும் இடங்களில் மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. தவிர்க்க முடியாத சூழல்கள் தவிர, மழையின்போது வெளியில் வருவதைத் தவிர்க்க வேண்டும். நீரோட்டத்தில் செல்ஃபி எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். மழை பெய்த உடனேயே உத்தரவுகளுக்காகக் காத்திருக்காமல், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிவாரண முகாம்களில் உள்ளவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநிலப் பேரிடர் மீட்புத் துறை தயார் நிலையில் இருக்கிறது. தேவையென்றால் தேசியப் பேரிடர் மீட்புத் துறை வரவழைக்கப்படும்.

நீர் தேங்கியிருக்கும் பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம். அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். குழந்தைகளை நீரில் விளையாட அனுமதிக்க வேண்டாம். குளிப்பதற்கு நீரோட்டமான பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம். சிறு சந்தேகம் ஏற்பட்டாலும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்ற நிவாரண முகாம்களுக்கு மக்கள் செல்ல வேண்டும்".

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x