

சென்னை
மழை வெள்ளத்துக்குள் பாதாள சாக்கடை குழிகள் மூழ்கியிருப்பதால் வாகனம் ஓட்டுவதற்கே அச்சமாக உள்ளது என்றும் அதை சீரமைக்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாகவும் வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
சென்னை நகர சாலைகளில் லேசான மழைக்கே வெள்ளம் தேங்கி விடும். 2 நாட்கள் தொடர்ந்து மழை பெய்தல் வாகன போக்குவரத்தே முடங்கும் அளவுக்கு சாலைகளில் மழை வெள்ளம் தேங்கி நிற்கும்.
சாலை போடும்போது சரியான திட்டமிடல் இல்லாதது, மழைநீர் வடிகால்வாய் மற்றும் பாதாள சாக்கடை பாதைகளை சரியாக அமைக்காதது ஆகியவற்றால்தான் மழை வெள்ளம் சாலைகளில் தேங்குகிறது. இதனால் சென்னை நகர சாலைகளில் தேங்கி நிற்கும் மழை நீரில் மோட்டார் சைக்கிள் அல்லது காரை ஓட்டிச்செல்வது வாகன ஓட்டிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது.
இதுகுறித்து வாகன ஓட்டிகளிடம் கேட்டபோது, அனைவரும் பொதுவாக கூறிய ஒரே பதில், சாலைகளில் மழை வெள்ளத்துக்குள் மறைந்திருக்கும் பாதாள சாக்கடை குழிகள் என்பதுதான். மழை வெள்ளத்தில் வாகனத்தில் செல்லும்போது எங்கேயாவது பாதாள சாக்கடைக் குழிகள் இருக்குமோ என்ற பயத்துடனேயே செல்கிறோம். உடைந்து கிடந்த பாதாள சாக்கடை மூடியின் பள்ளத்தில், மோட்டார் சைக்கிள் இறங்கி ஏறும்போது பல விபத்துகள் நடக்கின்றன.
சாலையில் தேங்கி இருக்கும் மழை வெள்ளத்தை விட, அந்த வெள்ளத்தில் மறைந்திருக்கும் பாதாள சாக்கடை பள்ளம் குறித்துதான் அச்சம் ஏற்படுகிறது. பாதாள சாக்கடையை சுத்தம் செய்வதற்காக அதை திறக்கும் ஊழியர்கள், அதை முறையாக மூடாமலும், அதைச்சுற்றி சிமென்ட் கலவை பூசாமலும் அப்படியே விட்டு விடுகின்றனர். இதனால் அந்த இடங்களில் பள்ளங்கள் ஏற்படுகின்றன.
சில இடங்களில் பாதாள சாக் கடை மூடியை சாலை மட்டத்தை விடவும் மேடாக வைத்து விடுவதும் விபத்துக்கு காரணமாகிறது. தின மும் ஆயிரக்கணக்கானோர் செல் லும் சாலையில் இந்த பள்ளங்களை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. ஒரே நாளில் சரிசெய்யக் கூடிய சாதாரண சீரமைப்பைக் கூட செய்யாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர்.
சாலைகளில் வெள்ளம் தேங்கி இருந்தாலும், அந்த சாலைகளில் பள்ளங்களோ, பெரிய குழிகளோ இருக்காது என்ற நம்பிக்கையை அதிகாரிகள் ஏற்படுத்த வேண்டும். பாதாள சாக்கடை மூடியை திறந்து பணி செய்யும் ஊழியர்களுக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். பள்ளங்கள் இருக்கிறதா, பாதாள சாக்கடை மூடி சரியாக இருக்கிறதா என்பதை கண்காணிக்கும் அதிகாரிகள், தங்கள் பணியை திறம்பட மேற்கொள்ள வேண்டும் என்று வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.