

ஆர்.பாலசரவணக்குமார்
புதுடெல்லி
பாலியல் பலாத்கார வழக்குகளில், தனது விருப்பத்துக்கு மாறாக பாலியல் உறவு நடந்தது என பாதிக்கப்பட்ட பெண் கூறினால் அந்த வாதத்தைத்தான் நீதிமன்றங்களும் இறுதியானதாக கருத வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது.
குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது நிறுவனத்தில் பணிபுரிந்த திருமணமாகாத ஓர் இளம்பெண்ணை மிரட்டி பாலியல் உறவு கொண்டுள்ளார். அதை ரகசியமாக வீடியோ எடுத்து பின்னர் அதைக்காட்டி மீண்டும், மீண்டும் அப்பெண்ணுடன் பாலியல் உறவு வைத்துள்ளார். அப் பெண்ணின் திருமண நிச்சயதார்த் தத்தின்போதுகூட அந்த பெண்ணை உறவுக்கு அழைக்கவே, பாதிக் கப்பட்ட அந்த பெண் அளித்த புகாரின்பேரில் போலீஸார் அந்த தொழிலதிபர் மீது பாலியல் பலாத்கார வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
மேல்முறையீடு
தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி தொழிலதிபர் தொடர்ந்த வழக்கை விசாரித்த குஜராத் உயர் நீதிமன்றம், ‘‘பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அந்த தொழிலதிபர் குறிப்பிட்ட தொகையை கொடுத்து இருவரும் சமரசமாகி விட்டனர்’’ என்ற அடிப்படையில் அந்த தொழிலதிபர் மீதான வழக்கை ரத்து செய்தது.
ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து அந்தப் பெண், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில், தனது விருப்பத்துக்கு மாறாக தன்னை மிரட்டி அந்த தொழிலதிபர் பாலியல் உறவு கொண்டார்.
மேலும் குஜராத் உயர் நீதிமன்றத்தில் தன்னை மிரட்டி, கட்டாயப்படுத்தி அவருடன் சமரசம் செய்து கொண்டதாக ஆவணங்களில் எழுதி வாங்கினர் எனவும் குற்றம் சாட்டினார்.
உச்ச நீதிமன்ற அமர்வு
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் யு.யு.லலித், இந்து மல்கோத்ரா, ஆர்.சுபாஷ் ரெட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘‘இந்திய சாட்சிய சட்டம் 1872 பிரிவு 114ஏ விருப்பத்துக்கு மாறான பாலியல் வல்லுறவு குறித்து விவரித்துள்ளது.
ஒரு பெண் தனது விருப்பத்துக்கு மாறாக ஆண் ஒருவர் தன்னுடன் பாலியல் உறவு கொண்டார் என குற்றம்சாட்டினால் அந்த வாதத்தைத்தான் நீதிமன்றங்களும் இறுதியானதாக எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த பெண் இல்லை என்றால் இல்லைதான். இந்த வழக்கில் குஜராத் உயர் நீதிமன்றம் தவறு இழைத்துள்ளது. இந்த வழக்கு சமரசமானது குறித்தும், அப்பெண்ணின் தீவிரமான குற்றச்சாட்டு குறித்தும் விசாரிக்க வேண்டியுள்ளது. எனவே இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் பாலியல் வல்லுறவு தொடர்பான விசாரணைக்கு முழுஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என உத்தரவில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பெண் வழக்கறிஞர் வரவேற்பு
உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பி.எஸ்.அஜிதா கூறியதாவது:
இப்படியொரு உத்தரவு பாலியல் வல்லுறவுகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு அருமருந்து என்றுதான் சொல்ல வேண்டும். காலம்காலமாக பாதிக்கப்படும் பெண்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளிப்பது என்பது மிகவும் குறைவு. குற்றம் சாட்டப்படும் ஆண்களின் வார்த்தைக்கு மதிப்பளிக்கும் ஆணாதிக்கம்தான் ஆரம்பகாலம் தொட்டு இருந்து வருகிறது.
ஆனால் பாதிக்கப்படும் பெண்கள் கூறும் வாதம்தான் இறுதியானது என 1994-ம் ஆண்டில் இருந்து பல்வேறு தீர்ப்புகள் வெளிவந்துள்ளன. அந்த தீர்ப்பைத்தான் தற்போது உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. பொதுவாக குற்றம் சாட்டப்பட்ட நபர் குற்றவாளி என இறுதிசெய்யப்படும் வரை அவர் நிரபராதி என்பதுதான் நியதியாக இருந்து வருகிறது.
ஆனால் இதுபோன்ற பாலியல் வல்லுறவு வழக்குகளில் கண்ணால் பார்த்த சாட்சியங்கள் இருப்பது கிடையாது. இந்தச் சூழலில் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாலியல் உறவு தங்களது விருப்பத்துக்கு மாறாக நடந்தது எனக் கூறினாலோ அல்லது வேண்டாம், இல்லை என மறுப்பு தெரிவித்தேன் எனக் கூறினாலோ அதுதான் சரியானதாக இருக்கும். அதைத்தான் நீதிமன்றங்களும் இறுதியானதாக, எடுத்துக்கொள்ள வேண்டும்’’ என உச்ச நீதிமன்றம் மீண்டும் உறுதி செய்திருப்பது வரவேற்கத்தக்கது மட்டுமல்ல பாராட்டுக்குரியது. இவ்வாறு வழக்கறிஞர் அஜிதா கூறினார்.