

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து 82 மணி நேர மீட்புப்பணியில் மீட்கப்பட முடியாமல் உயிரிழந்த சிறுவன் சுஜித் மரணம் குறித்து மணப்பாறை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருச்சி, மணப்பாறை, நடுக்காட்டுப்பட்டியில் கடந்த 25-ம் தேதி மாலை தனது வீட்டருகில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுவன் சுஜித் அங்கிருந்த ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தான். அவனை மீட்க அன்றிரவு முழுவதும் எடுக்கப்பட்ட முயற்சிகள் வீணான நிலையில் அதிகாலையில் 70 அடிக்கும் கீழே சென்றுவிட்டான்.
அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, மாநிலக் காவல்துறை, பேரிடர் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், தேசிய, மாநிலப் பேரிடர் மீட்புக்குழுக்கள், தீயணைப்புத்துறை, ஓஎன்ஜிசி, அண்ணா பல்கலைக்கழகம், ஜியாலஜிஸ்டுகள், நெய்வேலி சுரங்க நிபுணர் குழு, தன்னார்வலர்கள் என அரசு எந்திரத்தின் அத்தனை முயற்சிகளையும் இறக்கி 82 மணிநேரம் போராடியும் சிறுவனை உயிரோடு மீட்க முடியவில்லை.
சிறுவனின் குடும்பத்துக்கு அரசு ரூ.10 லட்சமும், அதிமுக, திமுக தலா ரூ.10 லட்சமும் இழப்பீடு அளித்தன. சிறுவன் மீட்பு விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி அறிக்கைப் போரில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குழந்தை சுஜித் மரணம் குறித்து மணப்பாறை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து சுஜித் உயிரிழந்தது குறித்து வேங்கைக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் உசேன் பீவி மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து சந்தேக மரணம் எனச் சிறுவன் சுஜித் மரணம் ஐபிசி பிரிவு 174 -ன் கீழ் மணப்பாறை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து விசாரணை நடத்தக் காவல் ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற விபத்துகளில் இவ்வாறு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வழக்கை முடித்துவைப்பது நடைமுறை ஆகும்.