

சென்னை
ஆகஸ்ட் மாதம் நியாயம் எனத் தெரிந்த கோரிக்கை இன்று அநியாயமாகத் தெரிகிறதா? என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
பல்வேறு மக்கள் நலக்கோரிக்கைகளை வைத்துப் போராடும் எங்களை மே மாதம் அழைத்துப் பேசி நியாயமான கோரிக்கை என 6 வார அவகாசம் கேட்டுவிட்டு தற்போது மிரட்டுவதா? அன்று நியாயமான கோரிக்கை, இன்று அநியாயமான கோரிக்கையானது எப்படி என மருத்துவர் சங்கம் அமைச்சர் விஜயபாஸ்கருக்குக் கேள்வி எழுப்பியுள்ளது.
இதுகுறித்து அனைத்து அரசு மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு (FOGDA) சார்பில் விடுத்துள்ள அறிக்கை:
“அனைத்து அரசு மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக ஏற்கெனவே 2009-ல் போடப்பட்ட அரசாணை எண் 354 உள்ள எதிர்கால சரத்துகளை அமல்படுத்தி, pb4@12 ஆண்டுகளில் இப்போது இருக்கும் 21 ஆண்டுகளுக்குப் பதிலாக நிர்ணயிக்க வேண்டும்.
* அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களை நியமிக்க வேண்டும்.
* பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு முறையான கலந்தாய்வை அரசு நடத்த வேண்டும்.
* பட்ட மேற்படிப்பில் 50 சதவீத இடங்களை அரசு மருத்துவர்களுக்கு வழங்க வேண்டும்.
என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டமும் அதே கோரிக்கைகளை முதல்வர் தலையிட்டு நிறைவேற்ற வேண்டும் என்று கோரி ஆறாவது நாளாகச் சாகும்வரை உண்ணாவிரத அறவழிப் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே உடல்நிலை குன்றிய நிலையில் 4 மருத்துவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆகஸ்ட் 27-ம் தேதிக்கு முன்னர் 5 நாட்கள் சாகும் வரை உண்ணாவிரதமும், 27-ம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தமும் மேற்கண்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி முன்னெடுக்கப்பட்டது. அன்று அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தையில் மேற்கண்ட கோரிக்கைகளை, முக்கியமாக அரசாணை 354 குறித்த எதிர்கால சரத்துகளை ஆறுவார காலத்தில் சாதகமான முடிவுக்குக் கொண்டு வருவது என எழுத்துப்பூர்வமான உறுதிமொழியை அனைத்து துறைத் தலைவர்கள் (டிஎம்இ, டிஎம்எஸ், டிபிஎச்) முன்னிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வழங்கினார்.
6 வார காலம் கடந்த பிறகும் கடந்த 24-ம் தேதி வரை அரசு சார்பில் எவ்விதமான முறையான பேச்சுவார்த்தையும் கோரிக்கைகளை நிறைவேற்ற அழைக்காத நிலையில், இதில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் கடந்த 25-ம் தேதி முதல் நாங்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை நடத்த அரசால் நிர்பந்திக்கப்பட்டுள்ளோம்.
நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் எங்களுடைய கோரிக்கைகள் அனைத்தும் நியாயமற்றது என உண்மைக்குப் புறம்பான, மக்களைத் திசை திருப்பும் ஒரு அறிக்கையைக் கொடுத்து இருப்பது வருத்தம் அளிக்கிறது.
இன்று தவறாகத் தோன்றிய எங்களுடைய கோரிக்கைகள் ஆகஸ்ட் 27-ம் தேதி அன்று மட்டும் எப்படி நியாயமான கோரிக்கைகள் என்று அமைச்சர் ஒப்புக்கொண்டு ஆறு வார கால அவகாசத்தில் அமல்படுத்த ஒப்புக்கொண்டார் என்ற சந்தேகம் எங்களுக்கு எழுகிறது.
எங்களது கோரிக்கையைத் தவறு என்று சொல்லும் அமைச்சர் இன்னொரு சங்கத்தை அழைத்துப் பேசி இந்தக் கோரிக்கைகள் இரண்டு வாரத்தில் நிறைவேற்றப்படும் என்று சொல்வதற்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை. மரியாதைக்குரிய சுகாதாரத்துறை அமைச்சர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவது மிகுந்த வருத்தமளிக்கிறது. உங்கள் மனசாட்சிக்குத் தெரியும் இந்தல் கோரிக்கைகள் நியாயமானவை. ஆதாரத்துடன் எடுத்து வைக்கப்பட்டவை. அரசு ஒப்புக் கொண்டது என்பது.
அரசு மருத்துவர்கள் தங்கள் உடலை வருத்திக்கொண்டு உண்ணாவிரதம் இருப்பது வேண்டாம் என்று கூறுகின்ற அமைச்சர், அரசு மருத்துவர் மனங்களில் நிலவும் மன அழுத்தத்தையும், ஆதங்கத்தையும் உணர்ந்து போராடுகின்ற அரசு மருத்துவர்களை அழைத்துப் பேச வேண்டும். அதை விடுத்து அரசாங்கம் அறவழியில் போராடும் மருத்துவர்களைக் காவல் துறையை வைத்து கெடுபிடிகளில் ஈடுபடுவது எவ்வகையிலும் உதவி புரியாது.
அதேபோல் துறைத் தலைவர்களை வைத்து ஒழுங்கு நடவடிக்கைகள் எடுப்பதும்,எச்சரிக்கை கொடுப்பதும் எந்தப் பயனையும் தராது.
அரசு மருத்துவர்கள் அனைவரும், பட்ட மேற்படிப்பு மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள், இளநிலை மாணவர்கள் மற்றும் ஜனநாயக நண்பர்களோடும், பொது சுகாதாரத்தை,பொது சுகாதாரத்துறையைக் காக்கின்ற இந்த அறவழிப் போராட்டத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று இரு கரம் கூப்பிக் கேட்டுக்கொள்கிறோம்.
எங்கள் மன வலியை உணர்ந்து பொதுமக்களும், ஊடகங்களும் ஆதரவு அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்”.
இவ்வாறு அனைத்து அரசு மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.