

சென்னை
மருத்துவர்கள் போராட்டம் வலுப்பெறுகிறது. 6-வது நாளாகப் போராட்டம் தொடரும் நிலையில் பிரேக் இன் சர்வீஸ், நன்னடத்தைச் சான்றிதழில் கை வைப்போம் என அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அனைத்து அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பு ‘ஃபோக்டா’ பல்வேறு கோரிக்கைகளை வைத்து கடந்த 25-ம் தேதி முதல் தமிழகம் தழுவிய போராட்டம் நடத்தி வருகிறது. தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பல வடிவிலான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
உயிர் காக்கும் அவசர சிகிச்சை தவிர மற்ற பணிகளைப் புறக்கணித்து வேலை நிறுத்தம் நடந்தது. இதனால் தமிழகம் முழுவதும் புறநோயாளிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். போராட்டத்தின் ஒருகட்டமாக உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
மருத்துவர்களுக்கு ஆதரவாக பயிற்சி மருத்துவர்கள், பட்டமேற்படிப்பு மாணவர்களும் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் திடீரென ஒரே ஒரு சங்கத்தை மட்டும் அழைத்துப் பேசி போராட்டத்தை வாபஸ் வாங்கியதுபோன்று அமைச்சர் பேட்டி அளித்தார். ஆனால் தங்களை அழைத்துப் பேசவில்லை, பேச்சுவார்த்தைக்குத் தயார், அழைத்துப் பேசாதவரை போராட்டம் தொடரும் என பிரதான சங்கமான ஃபோக்டா அறிவித்துள்ளது.
இதனிடையே போராடும் மருத்துவர்களை அழைத்துப் பேசாமல் மிரட்டும் வேலையில் அரசு இறங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இன்று சுகாதாரத்துறை சார்பில் ஒரு உத்தரவும், மருத்துவமனை டீன் சார்பில் ஒரு அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
அரசு மருத்துவர்கள் சங்கக் கூட்டமைப்பின் வேலை நிறுத்தம் 6-வது நாளாகத் தொடரும் நிலையில் சுகாதாரத்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தொடர்ந்து 5 நாட்கள் பணிக்கு வராத மருத்துவர்கள் மீது பிரேக் இன் சர்வீஸ் நடவடிக்கை எடுக்கப்படும். எச்சரிக்கையைத் தொடர்ந்து பணிக்கு வராத மருத்துவர்களைக் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது என சுகாதாரத்துறை உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர்கள் பயிற்சிக்குத் திரும்பத் தவறினால் நன்னடத்தைச் சான்று கிடையாது என மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு தெரிவித்துள்ளார்..
அரசு மருத்துவர்கள் நோயாளிகள் நலன் கருதி பணிக்குத் திரும்ப வேண்டும். போராட்டம் தொடர்ந்தால் மக்கள் நலனைப் பாதுகாக்க அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். நியாயமான கோரிக்கைகளை அரசு பரீசிலிக்கும் என அறிவித்த பின்பும், போராட்டம் நடத்துவது நல்லதல்ல என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஆனால் போராடும் மருத்துவர்கள் தரப்பில் கெடுபிடி காட்ட வேண்டாம். பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருந்தும் ஏன் பேச்சுவார்த்தைக்கு அழைக்க மறுக்கிறீர்கள் என மருத்துவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.