குழந்தை சுஜித் உயிரிழந்த விவகாரம்: யாரும் அரசியலாக்கக் கூடாது; ஜி.கே.வாசன்

ஜி.கே.வாசன்: கோப்புப்படம்
ஜி.கே.வாசன்: கோப்புப்படம்
Updated on
1 min read

மதுரை

குழந்தை சுஜித் விவகாரத்தை யாரும் அரசியலாக்கக் கூடாது என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் இன்று (அக்.30) ஜி.கே.வாசன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:

"குழந்தை சுஜித்தை மீட்கும் பணியில் தமிழக அரசு, அமைச்சர்கள், அனைத்துத் துறை அதிகாரிகள், மத்திய அரசு ஊழியர்கள் அயராது அர்ப்பணிப்புடன் ஈடுபட்டனர். சிறுவனைக் காப்பற்ற முடியவில்லை என்ற நிலை ஏற்பட்டது வருத்தமான விஷயம். மீட்புப் பணிகள் வெற்றியடையவில்லை என்பதால் அவற்றை அலட்சியப்படுத்தக் கூடாது.

இந்த விஷயத்தை யாரும் அரசியலாக்கக் கூடாது. குறை கூறக் கூடாது. இதற்காக நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நவீன இயந்திரத்தைக் கண்டுபிடிப்பவர்களுக்கு தமிழக அரசு பரிசு அறிவித்துள்ளது நல்ல செய்தி.

பொதுவாக மின்சாரம், கழிவுநீர், பள்ளம் ஆகியவற்றுக்காகத் தோண்டும்போது விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அரசு அதிகாரிகள் இதனைக் கண்காணிக்க வேண்டும். பொதுமக்கள் இதுகுறித்து விழிப்புடன் இருக்க வேண்டும்.

விவசாய வருமானத்தைப் பெருக்க தமிழக அரசு ஒரு சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். விவசாய விளைபொருள்களின் நியாயமான விலையை இதன்மூலம் உறுதி செய்யலாம். இந்தச் சட்டத்தினை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும்’’.

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

எஸ்.ஸ்ரீனிவாசகன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in