

சென்னை
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி தேர்தல் வழக்கை விரைந்து முடிக்க அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக எம்.பி. கனிமொழி வெற்றியை எதிர்த்து தொகுதி வாக்காளர் சந்தானகுமார், தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி கனிமொழி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கானது எஸ்.எம்.சுப்ரமணியன் முன்பு இன்று (அக்.30) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது,தேர்தல் ஆணையம் தரப்பில், இந்த வழக்கில் தலைமைத் தேர்தல் ஆணையரை விடுவிக்கக் கோரியும், தூத்துக்குடி தொகுதியில் தேர்தலுக்குப் பயன்படுத்தபட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வேறு தேர்தலுக்குப் பயன்படுத்தும் வகையில் விடுவிக்கக் கோரியும் மனுக்கள் தாக்கல் செய்யபட்டன.
இந்த மனுக்களுக்கு ஒரு வாரத்தில் பதிலளிக்கும் படி மனுதாரர் சந்தானகுமார், எம்.பி. கனிமொழி ஆகியோருக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியன் உத்தரவிட்டார்.
மேலும், எம்.பி. - எம்.எல்.ஏக்களுகான பதவிக்காலம் முடிந்த பின்புதான் தேர்தல் வழக்கில் முடிவு காணப்படும் என்ற பொதுக் கருத்து நிலவுவதாகக் கூறிய நீதிபதி, தூத்துக்குடி தேர்தல் வழக்கை இழுத்தடிக்காமல் விரைந்து முடிக்க நீதிமன்றத்திற்கு உதவும்படி அனைத்துத் தரப்புக்கும் அறிவுறுத்தி, நவம்பர் 14 ஆம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமான வாதம் உள்ளிட்ட அனைத்து மனுக்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.