Published : 30 Oct 2019 01:37 PM
Last Updated : 30 Oct 2019 01:37 PM

செய்யாறைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைத்திடுக: கி.வீரமணி

கி.வீரமணி: கோப்புப்படம்

சென்னை

செய்யாறைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைத்திட வேண்டும் என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக கி.வீரமணி இன்று (அக்.30) வெளியிட்ட அறிக்கையில், "செய்யாறு - வட ஆற்காடு மாவட்டத்தில் மிக முக்கியமான நகரமாகும். திருவத்திபுரம் - செய்யாறு இரண்டையும் இரட்டை நகரம் என்று சொல்வதுண்டு.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் மேலும் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்று அறிவித்தார். அந்த அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து பிரித்து செய்யாறைத் தலைமையிடமாகக் கொண்டு செய்யாறு மாவட்டம் உருவாக்குவது பொருத்தமாக இருக்கும்.

10.70 லட்சம் மக்கள் வசிக்கக்கூடிய 2288.06 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டதாகும் செய்யாறு. 5 தாலுகாக்கள் இதன் உள்ளடக்கமாகும். கிட்டத்தட்ட 60 அரசுத் துறை அலுவலகங்கள் இந்த மாவட்டத்தில் அடங்கக்கூடியவையாகும்.

இப்பொழுது திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டுமென்றால், கிட்டத்தட்ட 150 கி.மீ. பயணிக்க வேண்டிய குக்கிராமங்களும் இந்த மாவட்டத்தில் உள்ளன. எல்லா வகைகளிலும் தலைமையிடமாகக் கொண்டு மாவட்டம் அமைத்திட செய்யாறு மிகப்பொருத்தமான நகரமாகும்.

இவை எல்லாவற்றையும்விட 2011 ஆம் ஆண்டில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற மறைந்த அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா திருவண்ணாமலை மாவட்டத்தினை மறுசீரமைப்புச் செய்து செய்யாறைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கப்படும் என்று அறிவித்தார் என்பதையும் முக்கியமாகக் கவனத்திலும், கருத்திலும் எடுத்துக்கொண்டு, செய்யாறை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை அமைப்பது அவசியமாகும்.

செய்யாறு பகுதிவாழ் மக்கள் சார்பாக இந்தக் கோரிக்கையினை முதல்வருக்குத் திராவிடர் கழகம் முன்வைக்கிறது - ஆவன செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்," என கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x