

சூரிய மின்சக்தி நிலையம் அமைக்க அதானி குழுமத்துக்கு அளவற்ற சலுகைகள் வழங்குவதன் பின்னணி குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் 648 மெகாவாட் சூரிய மின்னுற்பத்தி நிலையம் அமைக்க அதானி குழுமத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
இதில் அதானி குழுமத்தின் முதலீடு ரூ.4,536 கோடி என கூறப்படுகிறது.
இதற்காக சுமார் 5,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட் டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலத்துக்கு எவ்வளவு இழப்பீடு வழங்கப்பட்டது என்பது தெரிய வில்லை.
அதானி குழுமத்திடம் இருந்து 25 ஆண்டுகளுக்கு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.7.01-க்கு வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மிக அதிகமான இந்த விலை எந்த அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது? பகிரங்கமாக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு நிர்ணயிக்கப்பட்டதா?
பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரின் நிறுவனம் என்பதால் அதிக விலை வழங்க முடிவு செய்யப்பட்டதா? மின்சாரத்தின் விலையை மின் வாரியம் முடிவு செய்யாமல் அதானி குழுமம்தான் முடிவு செய்யும் என்பது உண்மையா? இத்தகைய ஒப்பந்தங்களில் வெளிப்படைத்தன்மை இல்லாதது ஏன்? என்பது போன்ற மக்களின் சந்தேகங்களுக்கு தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.
காற்றாலை மின்சாரம் யூனிட் ரூ.3.50-க்கு கிடைத்தும் அதனை வாங்க தமிழக அரசு மறுக்கிறது. யூனிட் ரூ.4-க்கு மின்சாரம் தயாரிக்க முடியும் என்ற போதிலும் அனல்மின் நிலையத் திட்டங் களை கிடப்பில் போட்டுள்ளது. உடன்குடி, ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர், காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் ஆகிய இடங்களில் அனுமதி அளிக்கப்பட்ட அனல் மின்நிலைய திட்டங்கள் செயல் படுத்தப்படவில்லை.
பல ஆயிரம் கோடி நஷ்டத்தில் உள்ள தமிழ்நாடு மின்வாரி யத்தை அதானி குழுமத்திடம் சிக்க வைக்கலாமா? அதானி குழுமத்துக்கு மட்டும் அளவற்ற சலுகைகள் வழங்குவதன் பின்னணி குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என இளங்கோவன் வலியுறுத்தியுள்ளார்.