

கோவில்பட்டி
கோவில்பட்டியில் இயங்கி வரும் சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் அருகே தனியார் கட்டிடத்தில் தி சென்னை சில்க்ஸ் துணிக்கடை இயங்கி வருகிறது. நேற்று இரவு வழக்கம் போல் ஊழியர்கள் நிறுவனத்தைப் பூட்டிவிட்டுச் சென்றனர். கோவில்பட்டியில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதற்கிடையே இன்று அதிகாலை 3.50 மணிக்கு சென்னை சில்க்ஸின் 3-வது மாடியில் இருந்து புகை வந்துள்ளது. இதனை எதிர்ப்புறம் உள்ள தனியார் கடைகளில் இரவு காவல் பணியில் இருந்தவர்கள் பார்த்து, அந்த வழியாக வந்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம் புகை வருவது குறித்துத் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உடனடியாக கோவில்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலகத்திற்குத் தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் இசக்கி தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அடுத்தடுத்து 2-வது மாடி, முதல் மாடி என தீ பரவியதால் கழுகுமலை மற்றும் விளாத்திகுளம் தீயணைப்பு நிலைய வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயணைக்கும் பணி தொடர்ந்தது.
தகவல் அறிந்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஜெகதீஷ், கோட்டாட்சியர் விஜயா வட்டாட்சியர் மணிகண்டன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர். சுமார் 2.5 மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தீ விபத்தில் சுமார் ரூ.2 கோடி வரையிலான ஜவுளிகள் மற்றும் பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
கோவில்பட்டி காவல்துறை கண்காணிப்பாளர் ஜெபராஜ் மற்றும் போலீஸார் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மின்கசிவு காரணமாக தீப்பிடித்ததா அல்லது வேறு காரணம் எதுவும் உள்ளதா என கோவில்பட்டி மேற்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.