Published : 29 Oct 2019 02:23 PM
Last Updated : 29 Oct 2019 02:23 PM

குழந்தை சுஜித்தை மீட்க தொழில்நுட்பம் இல்லாதது தேசிய அவமானம்: திருமாவளவன்

சென்னை

குழந்தை சுஜித்தை மீட்க தொழில்நுட்பம் இல்லாதது தேசிய அவமானம் என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திருமாவளவன் இன்று (அக்.29) வெளியிட்ட அறிக்கையில், "ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுவன் சுஜித் வில்சனுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்.

கடந்த 25 ஆம் தேதி மாலை 5.40 மணியளவில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் தனது வீட்டுத் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுவன் சுஜித் பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். முதலில் 24 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சுஜித் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக நழுவி இறுதியில் 88 அடி ஆழத்தில் சிக்கியிருந்தான்.

தேசிய பேரிடர் மேலாண்மை குழு, மாநில பேரிடர் மேலாண்மை குழு, தீயணைப்புத்துறை, காவல்துறை உள்ளிட்ட ஏராளமான குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டன. சுஜித்தை மீட்பதற்கு மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வகையிலான முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. சிறுவன் உயிரிழந்ததாக இன்று அதிகாலை 2.30 மணியளவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பல மணிநேரம் உயிருக்கு போராடிய சிறுவனைக் காப்பாற்ற நம்மிடையே உரிய மீட்புத் தொழில்நுட்பம் இல்லாதது தேசிய அவமானமே ஆகும்.

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்பதற்கு உரிய தொழில்நுட்பமும் அதற்கான கருவிகளும் இயந்திரங்களும், மீட்புப் பயிற்சியும் இல்லாததே இந்நிலைக்கு காரணம்.

ஆழ்துளை கிணற்றில் தவறி விழும் குழந்தைகளை உடனடியாக மீட்பதற்கான தொழில்நுட்பத்தையும் அதற்கான கருவிகளையும் இயந்திரங்களையும் மத்திய-மாநில அரசுகள் விரைந்து உருவாக்கிட வேண்டும். இத்தகைய மீட்புப் பணியில் ஈடுபடுபர்களுக்கு சிறப்புப் பயிற்சியையும் வழங்கிட வேண்டும்.

ஆழ்துளை கிணறு தோண்டுவதற்கு கடுமையான விதிகள் மற்றும் நிபந்தனைகளுடன் கூடிய புதிய சட்டத்தை அரசு இயற்றிட வேண்டும். பயன்படுத்தப்படாத பாதுகாப்பற்ற ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூடுவதற்கும் அவற்றைக் கண்காணிப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

சுஜித்தை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அவரது பெற்றோருக்கு ரூ.1 கோடி இழப்பீடும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பும் வழங்கிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்ந்து கடந்த 5 நாட்களாக தீவிர மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்ட தமிழக அரசு உள்ளிட்ட அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x