

சென்னை
இலங்கைக்கு தெற்கே உருவாகியுள்ள காற்றழுத்த பகுதியால் அடுத்த இரு நாட்களுக்குக் கன்னியாகுமரி, ராமநாதபுரம்,நெல்லை, தேனி உள்படத் தென் மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தமிழ்நாடு வெதர்மேன் தகவல் தெரிவித்துள்ளார்
வடகிழக்குப்பருவமழை கடந்த 16-ம் தேதி தொடங்கியது. வங்கக்கடலில் ஏற்பட்டிருந்த மேலடுக்கு சுழற்சி காரணமாக 5 நாட்களுக்கு தமிழகமெங்கும் பரவலாக மழை பெய்தது. அதன்பின் அரபிக் கடற்பகுதியில் ஏற்பட்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாலும் தென் மாவட்டங்களிலும், உள்வட்டங்களிலும் மழை பெய்தது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியபோதிலும் அது ஆந்திரா நோக்கிச் சென்றதால், சென்னை உள்ளிட்ட கடற்கரையோர நகரங்களுக்கு எதிர்பார்த்த மழை பெய்யவில்லை.
இந்த சூழலில் தற்போது வங்கக்கடலில், இலங்கைக்கு தெற்கே காற்றழுத்த பகுதி உருவாகி இருக்கிறது. இந்த காற்றழுத்த பகுதி மெதுவாக நகர்ந்து குமரிக்கடற்பகுதியை நோக்கி நகரும் அதனால், தென் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்குக் கன மழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தமிழ்நாடு வெத்ரமேன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேன் என்ற பெயரில் ஃபேஸ்புக்கில் எழுதிவரும் பிரதீப் ஜான் தனது பதிவில் குறிப்பிட்டு இருப்பதாவது:
இலங்கைக்கு தெற்கே காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு மற்றும் வடமேற்கு பகுதியில் நகர்ந்து குமரிக்கடல் பகுதியை நோக்கி நகரும். அப்போது தீவிரமான காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறும். அங்கிருந்து லட்சத்தீவு கடற்பகுதி வழியாக அரபிக்கடல் பகுதிக்குள் செல்லும். அப்போது தீவிர மண்டலமாகப் புயலாக மாறும், புயலாக மாறினால், அதற்கு மஹா புயல் எனப் பெயரிடப்படும்.
குமரிக்கடல் பகுதியில் காற்றழுத்த பகுதி வரும்போது புயலாக இருக்காது என்பதால் அச்சப்படத்தேவையில்லை. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இருந்த ஒக்கி புயலோடு ஒப்பிடும்போது இது வலுவிழந்த நிலையாகத்தான் இருக்கும்.இதன் காரணமாகத் தென் தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உண்டு.
கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தேனி, ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக இந்த மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதிகளில் மிககனமழை பெய்யக்கூடும்.
குமரிக்கடல் பகுதியிலிருந்து காற்றழுத்த பகுதி கடற்பகுதியில் செல்லும்போது காற்றை உள் இழுப்பதன் காரணமாகத் தென் மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதிகளில் மிககனமழைக்கு வாய்ப்பு உண்டு. காற்று வீசுவதைப் பொறுத்தவரை ஒக்கி புயல்போன்று மணிக்கு 80 கி.மீ வேகத்தில் வீசாது. ஏனென்றால் ஒக்கிபுயல் கன்னியாகுமரி கடற்பகுதியையொட்டி சென்றது. ஆனால், இது தீவிரகாற்றழுத்தப்பகுதியாக ஏறக்குறைய 150 கி.மீ தொலைவில் செல்வதால், காற்று அதிகபட்சமாக 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் இன்றும், நாளையும் மிகக் கனமழை பெய்யக்கூடும். திருவனந்தபுரம் கடற்பகுதியில் கடுத்த சில நாட்களுக்குப் பலமான காற்று வீசக்கூடும் என்பதால் கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், லட்சத்தீவு, திருவனந்தபுரம் மீனவர்கள் அடுத்த 4 முதல் 5 நாட்களுக்குக் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இன்று (செவ்வாய்கிழமை) இரவு மலைப்பகுதிகளான மாஞ்சோலை, பாபநாசம், குற்றாலம், கோதையாறு, கம்பம், போடி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் காற்று 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். இந்த பகுதிகளில் ஈரப்பதம் உள்ள காற்று உள்ளிழுக்கப்படும் ஆனால், வெளியே செல்ல முடியாத நிலை இருப்பதால், தென் மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதிகளில் மிக கனமழை முதல் மிகமிக கனமழைக்கு வாய்ப்பு உண்டு.ஆதலால், தென் மாவட்டங்களில் அடுத்து இரு நாட்களுக்கு (செவ்வாய், புதன்) தென் மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழைக்குப் பெய்யக்கூடும். ஒரு சில இடங்களில் 100மிமீ மழை கூட பெய்ய வாய்ப்புள்ளது
சென்னையைப் பொறுத்தவரைக் காற்றின் இழுப்பின் காரணமாக அடுத்த இரு நாட்களுக்கு இடைவெளிவிட்டு மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. அதிகாலை நேரத்தில் சென்னை அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நல்ல மழை பெய்யும். பகல் நேரத்தில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் திடீர் மழைக்கும் வாய்ப்பு உண்டு. மேலும், கன்னியாகுமரியில் கடற்பகுதியில் இருக்கும் காற்றழுத்த பகுதி இழப்பு காரணமாக, சென்னை முதல் டெல்டா கடற்பகுதிவரை வடதமிழக கடற்பகுதியில் மழை பெய்யக்கூடும். அடுத்த 4 நாட்களுக்குத் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உண்டு.
இவ்வாறு பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார்.