

சென்னை
தன் உயிரைக் கொடுத்து சுஜித் பாடம் கற்றுக்கொடுத்திருக்கிறான் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுஜித் இன்று (அக்.29) சடலமாக மீட்கப்பட்டான். மீட்கப்பட்ட குழந்தையின் உடல் உடனடியாக மணப்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. உடற்கூராய்வுக்குப் பின் அமைச்சர்கள் குழந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
சிறுவன் சுஜித்தின் உடல் பாத்திமா புதூரில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு அவனது உடலுக்குப் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சுஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
சுஜித்துக்கு தன் ட்விட்டர் பக்கத்தில் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்வாக இன்று அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "எப்படியாவது நலமுடன் வந்துவிடுவான் என்று அனைவரும் எதிர்பார்த்த குழந்தை சுஜித் சடலமாக மீட்டெடுக்கப்பட்டது மனதை உலுக்குகிறது.
குழந்தையை இழந்திருக்கும் பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூற வார்த்தைகளால் முடியாது.
ஆழ்துளை குழிகளில் நிகழும் உயிரிழப்பில் இதுவே கடைசியாக இருக்கட்டும். தன் உயிரைக் கொடுத்து சுஜித் கற்றுத் தந்திருக்கிற பாடத்தை அனைத்துத் தரப்பினரும் இனியாவது கடைபிடிக்க வேண்டும்," என தெரிவித்துள்ளார்.