

சென்னை
தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுவதற்கான பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. புதிய மாவட்டங்களுக்கு மாற்றல் பெற விரும்பும் அரசு அலுவலர்கள் நவம்பர் 5-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தை பிரித்து கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தென்காசி, காஞ்சிபுரத்தை பிரித்து செங்கல்பட்டு, வேலூர் மாவட்டத்தை பிரித்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை என 5 புதிய மாவட்டங்களை உருவாக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதையடுத்து, 5 மாவட்டங்களுக்கான தாலுகாக்கள், எல்லை வரையறை ஆகியவற்றை மேற்கொள்ள வருவாய் நிர்வாக ஆணையருக்கு அறிவுறுத்தப்பட்டு, புதிய மாவட்டங்களுக்கான சிறப்பு அதிகாரிகளாக ஐஏஎஸ் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டனர். உருவாக உள்ள 5 மாவட்டத் தலைநகரங்களில் இருந்தபடியே சிறப்பு அதிகாரிகள் தற்போது பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது புதிதாகஉருவாக்கப்படும் மாவட்டங்க ளுக்கான தலைமையிடத்தையும், ஆட்சியர் அலுவலகத்தையும் தற்காலிகமாக அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்து வருகின்றனர். இதுதொடர்பான பணிகளுக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கும் அரசாணைக்காக அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், புதிய ஆட்சியரகத்தின் கீழ் பணியாற்ற விரும்பும் அலுவலர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக 4 மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், 5 புதிய மாவட்டங்களுக்கான சிறப்பு அதிகாரிகளுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:விழுப்புரம், திருநெல்வேலி, வேலூர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் மாவட்டத்தில் பணியாற்றும் அதிகாரிகள், அலுவலர்கள், புதிய மாவட்டத்துக்கு மாற விரும்பினால், அவர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற வேண்டும். இதற்கான பொறுப்பு அதிகாரியான மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் விருப்ப மனுக்களை நவம்பர் 5-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
அதிக மனுக்கள் வந்திருந்தால், பணி மூப்பு அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும். குறைந்த மனுக்கள் வந்தால், இளநிலையில் உள்ளவர்களை தேர்வு செய்ய வேண்டும்.
நவம்பர் 5-ம் தேதி மாலை பட்டியல் இறுதி செய்யப்பட்டு, 6-ம் தேதி வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட வேண்டும். எந்த சிக்கலும் ஏற்படாதவாறு வெளிப்படையாக, நேர்மையான முறையில் பட்டியலை தயாரிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.