

திருச்சி
82 மணி நேர நீண்ட போராட்டத்திற்குப்பின் மீட்கப்படாமல் உயிரிழந்த சிறுவன் சுஜித் உடல் பொதுமக்களின் கண்ணீர் அஞ்சலிக்குப்பின் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கடந்த 25-ம் தேதி திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் வசிக்கும் மரியதாசின் இளையமகன் சுஜித் (2) ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்தான். முதலில் 15 அடிக்குள் ஆழத்தில் சிக்கியிருந்த சுஜித், பின்னர் திடீரென 30 அடிக்கும் கீழே புதைந்தான்.
அமைச்சர் விஜயபாஸ்கர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப்பணியில் நேரடியாக வந்து மீட்புப்பணியில் இறங்கினார். ஜேசிபி இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டது. அன்று இரவு 2-30 மணி அளவில் சிறுவன் இன்னும் கீழே 70 அடி ஆழத்தில் சிக்கினான்.
தேசிய பேரிடர் மீட்புப்படையினர் வரவழைக்கப்பட்டு களத்தில் குதித்தனர். சிறுவன் சிக்கியுள்ள குழிக்கு அருகில் இன்னொரு குழி தோண்ட முடிவெடுத்து அதற்கான இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டது. கடந்த 3 நாட்களாகச் சிறுவனை மீட்கக் குழியை தோண்டும்பணி வேகமாக நடந்துவந்தது.
ஈரமாக இருந்த மண் உள்வாங்கியதில் சிறுவன் சுஜித் 88 அடிக்கும் கீழே சென்றுவிட்டான். மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தும் பொருட்டு, அமைச்சர் விஜயபாஸ்கர், அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோரும், திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு ஆகியோர் சம்பவ தங்கியிருந்தனர்.
பேரிடர் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணனும் கடந்த 2 நாட்களாக அங்கிருந்து சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். சிறுவனை மீட்க உலகெங்கும் பிரார்த்தனைகள் நடந்தன.
இந்நிலையில் நள்ளிரவு 2 மணியளவில் செய்தியாளர்களைச் சந்தித்த பேரிடர் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணன், 28ம் தேதி இரவு 10 மணிமுதல் குழந்தை சுஜித் விழுந்த குழியிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியதாகவும், உடல் சிதைந்த நிலையில் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
குழந்தை சுஜித் உயிரிழந்த தகவலை அவர் உறுதிப்படுத்தினார். இதனால் தமிழகம் மட்டுமல்லாமல் இந்நிகழ்வை உற்று நோக்கிக்கொண்டிருந்த உலகம் முழுதும் பிரார்த்தனை செய்தவர்கள் அனைவரும் அதிர்ந்துபோயினர். காலை 4-30 மணி அளவில் 88 அடி ஆழத்திலிருந்த சுஜித்தின் உடல் முழுமையாக மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட சிறுவனின் உடல் உடனடியாக மணப்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. உடற்கூராய்வுக்குப்பின் அமைச்சர்கள் சிறுவன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
சிறுவன் சுஜித்தின் உடல் பாத்திமா புதூரில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு அவனது உடலுக்குப் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் காலை சரியாக 8.15 மணி அளவில் கிருத்துவ முறைப்படி பிரார்த்தனைச் செய்யப்பட்டு சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சுர்ஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அப்போது அங்குக் கூடியிருந்த சுஜித்தின் பெற்றோர், உறவினர்கள், பொதுமக்கள் கதறி அழுதனர். 82 மணி நேர நீண்ட போராட்டத்திற்குப்பின் மூச்சை நிறுத்திக்கொண்ட சிறுவன் சுஜித் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தொடர்ந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தக் குவிந்தவண்ணம் உள்ளனர்.