Published : 29 Oct 2019 08:32 AM
Last Updated : 29 Oct 2019 08:32 AM

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் தொடக்கம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் அனுசரிப்பு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் நேற்று தொடங்கியது. கோயில் உள், வெளி பிரகாரங்கள் மற்றும் தற்காலிக பந்தல்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கியிருந்து சஷ்டி விரதத்தை தொடங்கினர்.

சூரபத்மனை சுவாமி ஜெயந்திநாதர் வதம் செய்த புராணச் சிறப்பு வாய்ந்த தலம் என்பதால் திருச்செந்தூரில் நடைபெறும் கந்த சஷ்டி விழா சிறப்பு வாய்ந்தது. நடப்பாண்டுக்கான கந்த சஷ்டி விழா நேற்று தொடங்கியது. அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.

காலை 6 மணியளவில் வள்ளி, தெய்வானையுடன், சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு எழுந்தருளினார். வரும் 2-ம் தேதி வரை 6 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் யாக பூஜை, நேற்று காலை 6.30 மணிக்கு தொடங்கியது. காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம் முடிந்து, சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. பகல் 12 மணியளவில் யாகசாலையில் மகா தீபாராதனை நடைபெற்றது.

பின்னர், சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலையில் இருந்து தங்கசப்பரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி, பிரகாரம் வழியாக சண்முகவிலாச மண்டபத்தை அடைந்தார். அருணகிரிநாதர் இயற்றிய வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு பாடல்களை, பக்தர்கள் அப்போது பாடினர். மாலையில் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. பின்னர், சுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளி கிரி வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

குவிந்த பக்தர்கள்

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் முதலே இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், கனடா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவியத் தொடங்கினர். நேற்று காலையில், கடலிலும், நாழிக் கிணற்றிலும் புனித நீராடி அவர்கள் 6 நாள் விரதத்தை தொடங்கினர். ஏராளமானோர் கோயில் பிரகாரத்தில் அங்கபிரதட்சணம் செய்தும், மடிப்பிச்சை ஏந்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, கோயில் செயல் அலுவலர் சா.ப.அம்ரித், ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ எஸ்.பி.சண்முகநாதன், கோயில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சூரசம்ஹாரம்

2-ம் நாளான இன்று முதல் (அக்.29) விழாவின் 5-ம் நாளான வரும் நவ.1-ம் தேதி வரை தினமும் அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் நவ.2-ம் தேதி மாலை 4.30 மணிக்கு மேல் கடற்கரையில் நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். நவ.3-ம் தேதி இரவு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. வரும் நாட்களில் பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்பதால், அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெறுகின்றன. திருச்செந்தூரின் விடுதிகள், சத்திரங்கள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x