Published : 29 Oct 2019 08:13 AM
Last Updated : 29 Oct 2019 08:13 AM

குழந்தை சுஜித் மரணம் : 82 மணிநேர முயற்சி வீணானது

திருச்சி

குழியில் விழுந்த சிறுவன் சுஜித் மீட்கப்படாமலே மரணத்தைத் தழுவினார். அரசின் அத்தனை எந்திரங்களும் முடுக்கிவிடப்பட்டு 82 மணி நேர முயற்சி வீணானது. அனைத்து பிரார்த்தனைகளும் பலனளிக்காமல் சுர்ஜித் மீட்கப்படாமலே உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 25-ம் தேதி திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் வசிக்கும் மரியதாசின் இளையமகன் சுஜித் (2) ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்தான். உடனடியாக தீயணைப்புத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

முதலில் 15 அடிக்குள் ஆழத்தில் சிக்கியிருந்த சுஜித், பின்னர் திடீரென 30 அடிக்கும் கீழே புதைந்தான். சிறுவனை தீயணைப்புத்துறையினர் மீட்பதில் சிரமம் ஏற்பட்டதால், மதுரையிலிருந்து ஆழ்துளைக் கிணற்றில் விழுபவர்களை மீட்கும் மணிகண்டன் வரவழைக்கப்பட்டார். அவரது கருவியைப் பயன்படுத்தியும் சிறுவனை மீட்க முடியாத நிலையில்,

அமைச்சர் விஜயபாஸ்கர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப்பணியில் நேரடியாக இறங்கினார். ஜேசிபி இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டது. இரவு 2-30 மணி அளவில் சிறுவன் இன்னும் கீழே 70 அடி ஆழத்தில் சிக்கினான். 5-30 மணிக்குமேல் சிறுவனின் இதயத்துடிப்பைக் கேட்க முடியவில்லை என்று தெரிவித்தனர்.

காலை 12 மணி அளவில் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் களத்தில் குதித்தனர். சிறுவன் சிக்கியுள்ள குழிக்கு அருகில் இன்னொரு குழி தோண்ட முடிவெடுத்து அதற்கான இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டது. கடந்த 3 நாட்களாகச் சிறுவனை மீட்கக் குழியை தோண்டும்பணி வேகமாக நடந்துவந்தது.

ஈரமாக இருந்த மண் உள்வாங்கியதில் சிறுவன் சுஜித் 88 அடிக்கும் கீழே சென்றுவிட்டான். மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தும் பொருட்டு, அமைச்சர் விஜயபாஸ்கர், அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோரும், திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு ஆகியோர் சம்பவ தங்கியிருந்தனர்.

பேரிடர் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணனும் கடந்த 2 நாட்களாக அங்கிருந்து சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். சிறுவனை மீட்க உலகெங்கும் பிரார்த்தனைகள் நடந்தன.

இந்நிலையில் நள்ளிரவு 2 மணியளவில் செய்தியாளர்களைச் சந்தித்த பேரிடர் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணன், 28ம் தேதி இரவு 10 மணிமுதல் குழந்தை சுஜித் விழுந்த குழியிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியதாகவும், உடல் சிதைந்த நிலையில் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

குழந்தை சுஜித் உயிரிழந்த தகவலை அவர் உறுதிப்படுத்தினார். இதனால் தமிழகம் மட்டுமல்லாமல் இந்நிகழ்வை உற்று நோக்கிக்கொண்டிருந்த உலகம் முழுதும் பிரார்த்தனை செய்தவர்கள் அனைவரும் அதிர்ந்து போயினர். காலை 4-30 மணி அளவில் 88 அடி ஆழத்திலிருந்த சுஜித்தின் உடல் முழுமையாக மீட்கப்பட்டது.

மீட்கப்பட்ட சிறுவனின் உடல் உடனடியாக மணப்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. உடற்கூராய்வுக்குப்பின் அமைச்சர்கள் சிறுவன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சிறுவன் சுஜித்தின் உடல் பாத்திமா புதூரில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு அவனது உடலுக்குப் பொதுமக்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர். பின்னர் அங்குள்ள கல்லறையில் சிறுவனின் உடல் நல்லடக்கம் செய்யப்படும்.

82 மணி நேர ஒட்டுமொத்த அரசு எந்திரத்தின் தொடர் முயற்சிகள் முழுமைபெறாமல் அனைவரின் நம்பிக்கையையும் வீணடித்துவிட்டு சிறுவன் சுஜித்தின் மரணம் நிகழ்ந்திருப்பது தமிழகம் தாண்டி உலகெங்கும் இந்நிகழ்வைக் கவனித்து வந்தவர்களை கடும் வேதனைக்குள்ளாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x