Published : 28 Oct 2019 10:18 PM
Last Updated : 28 Oct 2019 10:18 PM

சுஜித் மீட்புப்பணியை அரசியலாக்க விரும்பவில்லை : ஸ்டாலின் 

சென்னை

நான்கு முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை, சுகாதாரத்துறை அமைச்சரும், முதல்வரும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தாதது வேதனையளிக்கிறது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நான்கு முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களை, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (28-10-2019) மாலை, நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். உடலை வருத்தி போராட்டம் நடத்தவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த 25 ஆம் தேதியில் இருந்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இருக்கக்கூடிய அரசு மருத்துவர்கள், ஏறக்குறைய 18 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் இந்தத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

அரசு, பலமுறை கொடுத்திருக்குக்கும் வாக்குறுதியை - அதுவும் எழுத்துபூர்வமாகக் கொடுத்திருக்கும் வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை. முக்கியமாக நான்கு கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இந்தப் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.

அவர்களது நான்கு கோரிக்கைளில் ஒன்று, ஊதியத்தை அடிப்படையாக வைத்து அமைந்திருக்கிறது. மற்ற கோரிக்கைகள், நோயாளிகளுக்கு, பொதுமக்களுக்கு, மருத்துவமனைகளுக்குப் பயன்படும் வகையில் அமைந்திருக்கிறது. இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென தொடர்ந்து 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இதுவரை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அவர்களோ, முதலமைச்சர் அவர்களோ போராடிக் கொண்டிருக்கும் மருத்துவர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தாமல் மவுனம் காத்து வருகின்றனர். இது உள்ளபடியே வேதனைக்குரிய ஒன்றாகும்.

இந்தப் போராட்டத்தில், ஒரு குறிப்பிட்ட சில மாவட்டங்களில் ஐந்து பேர் - ஐந்து பேர் என்று பிரித்து கொண்டு, தொடர் உண்ணாவிரதப் போராட்டங்களையும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக, சென்னை அரசு ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் உடல்நலம் பெரிதும் பாதிக்கப்பட்டு இரண்டு பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்ப்பட்டிருக்கிறார்கள்.

எனவே, நான் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்களை, திமுக சார்பில் கேட்டுக்கொள்ள விரும்புவது, ‘போராடுங்கள் அது நம்முடைய உரிமை, நமக்கிருக்கும் கடமை, ஆனால், தங்களுடைய உடலை வருத்திக் கொண்டு, உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டு, இந்தப் போராட்டத்தை நடத்திட வேண்டும், என்ற கோரிக்கையை வைத்திருக்கிறேன்.

இந்தப் போராட்டத்திற்கு திமுக மட்டுமல்ல, இன்றைக்கு இருக்கும் அனைத்து எதிர்க்கட்சிகளும், அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் ஆதரவு தருவது மட்டுமல்ல, கடைசிவரையில் துணை நிற்போம் என உறுதி தந்திருக்கிறோம்.

நானும் உறுதியாக தி.மு.கழகத்தின் சார்பில், முழு ஒத்துழைப்பை - முழு ஆதரவை இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்களுக்கு வழங்குவேன் என்ற உறுதியை தெரிவித்துக் கொள்கிறேன், என்று கூறிய ஸ்டாலின் பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்:

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி 72 மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இதில் தமிழக அரசின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது?

நான் இந்த நேரத்தில் அதை அரசியலாக்கிட விரும்பவில்லை. ஏறக்குறைய நான்கு நாட்களாக அந்தக் குழந்தையை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளும் நடந்து கொண்டிருப்பதை, உங்களைப் போல் நானும் தொலைக்காட்சிகளில் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

எப்படி அனைத்து தமிழக மக்களும், மற்ற மாநில மக்களும், உலகெங்கிலும் வாழும் மனிதர்கள் எல்லோரும், அந்தச் சிறுவன் மீண்டு வர வேண்டும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்களோ, அதே உணர்வோடுதான் நானும் இருக்கிறேன்.

இவ்வாறு ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x