Published : 28 Oct 2019 09:50 PM
Last Updated : 28 Oct 2019 09:50 PM

ஐபிசி பிரிவு 304(2): ஆழ்துளை கிணறு குறித்த தமிழக அரசு சட்டம் சொல்வதென்ன?

சென்னை

கைவிடப்பட்ட பராமரிக்காத உரிமையாளர் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜாமீனில் வெளிவரமுடியாத ஐபிசி பிரிவு 304(2)-ன்கீழ் வழக்குப்பதிவு செய்யலாம் என ஆழ்துளை கிணறு குறித்து தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளது.

ஆழ்துளை கிணற்றை கைவிடும், பராமரிக்காத உரிமையாளர் கடுமையாக தண்டிக்கப்பட சட்டத்தில் வழி உள்ளது. அதேப்போன்று ஆழ்துளை கிணற்றை தோண்டுவது, பராமரிப்பது குறித்தும் சட்டத்தில் வழிகாட்டுதல்கள், நெறிமுறைகள் உள்ளன. சுஜித் ஆழ்துளை கிணற்றில் சிக்கியதன்மூலம் தமிழகம் முழுதும் உள்ள ஆழ்துளை கிணற்றை கண்டறியவும் மூடவும் ஒரு எழுச்சி மக்களிடையே உருவாகியுள்ளது.

ஆழ்துளை கிணறு குறித்த தமிழக அரசின் சட்டம் என்ன சொல்கிறது?

2012 ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்த பின்னர், சடலமாக மீட்டெடுக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் சிவகாமி எனும் சட்ட கல்லூரி மாணவி , சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த பொதுநல வழக்கில் தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, ஆழ்துளை கிணறுக்காண சட்டத்தை ஒரு மாதத்திற்குள் நிறைவேற்றி, கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது.

பாதிக்கப்பட்ட அந்த குழந்தையின் பெற்றோருக்கு ரூபாய் ஒரு லட்சம் நிவாரணம் வழங்கவும், அத்தொகையை ஆழ்துளை கிணறை சரியாக பராமரிக்காத நபரிடமிருந்து வசூலிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

இதையடுத்து தமிழக அரசு கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் (ஆழ்துளை கிணறு விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு ஒழுங்குமுறைச் சட்டம்) -2015 ( TAMIL NADU PANCHAYATS (REGULATION OF SINKING OF WELLS AND SAFETY MEASURES) RULES, என்ற சட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவந்தது.

இச் சட்டத்தின் கீழுள்ள பாதுகாப்பு நெறிமுறைகள்;

* ஆழ்துளை கிணறு வெட்டுவதற்கான உரிமம் வைத்திருக்கும் நபர், அல்லது கிணறுக்கான உரிமையாளர், கிணறு புதிதாக தோண்டும் போதும், அல்லது ஆழப்படுத்தும் போதும்,அல்லது சீரமைக்கும் போதும், கீழ்க்கண்ட பாதுகாப்பு நெறிமுறைகளை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும்.

* கிணறு தோண்டும் பணியாளர்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன், பாதுகாப்பு உபகரணங்களுடன் வேலை செய்கிறார் என்பதை உறுதி செய்ய வேண்டும்.

* வேலை செய்யும் பணியாளர்கள் உரிய உரிமத்துடன் பணியாற்றுகிறார்கள் என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

* கிணறு தோண்டும் பணியை சற்று நிறுத்தினாலோ அல்லது ஓய்வு பெறும் வேளையிலோ அந்தக் கிணறு மூடி இருக்கிறதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

* கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகளை களிமண், மணல், கற்கள் கொண்டு தரை வரை சமதளமாக கண்டிப்பாக மூடிவிடவேண்டும்.

* ஆழ்துளை கிணறு வெட்டும் போதும் ஆழப்படுத்தும் போதும் சீரமைக்கும் போதும், மேற்படி நடைமுறைகள் பேணப்பட வேண்டும்.

* கிணற்றின் உரிமையாளர் கிணறு வெட்டுவதற்கு முன்பு படிவம்-B வைத்துள்ளார் என்பதை உறுதி செய்ய வேண்டும்.

* கிணறு வெட்டும் போது, வெட்டப்பட விருக்கும் ஆழ்துளை கிணற்றின் நீளம், அகலம் நிலத்தின் உரிமையாளர் அவரது முகவரி ஆகியவற்றை அனைவரும் தெரிந்து கொள்ளும் விதமாக தகுந்த முன்னெச்சரிக்கை பதாகைகள், தட்டிகள் வைக்க வேண்டும்.

* நிலத்திற்கு ஏற்றார்போல் மேற்படி கிணற்றைச் சுற்றி பாதுகாப்பான வேலி அமைத்தல் வேண்டும்.

* 0.5x0.5x0.6 மீட்டர் அளவிலான சிமெண்ட் மேடை கிணற்றைச் சுற்றி அமைத்திட வேண்டும், 0.3 மீட்டர் நிலப்பரப்பிற்கு கீழும், 0.3 மீட்டர் நிலப்பரப்பிற்கு மேலும் மேடை அமைத்திட வேண்டும்.

* எக்காரணம் கொண்டும் இடைவேளை நேரத்தில், திறந்த கிணற்றை விட்டு பணியாளர்கள் விலகிச் செல்லக் கூடாது.

* கிணறு தோண்டிய பிறகு, சேறு உள்ள பகுதி அனைத்தையும், கால்வாய்களை பாதுகாப்பாக மூடி விட வேண்டும்..

* ஏற்கனவே நிலம் எப்படி இருந்ததோ அதே மாதிரி மீண்டும் செய்திடல் வேண்டும்.

* இரும்பு மூடி மூலம், வெல்டிங் செய்து உறுதியான மூடியை போல்ட் மட்டும் நட் (Bolt and Nut) மூலமாக ஆழ்துளை கிணற்றின் வாயை மூடி பாதுகாப்பாக உள்ளது என்பதை உறுதி செய்ய வேண்டும்.

* உள்ளூர் பஞ்சாயத்துத் தலைவர் மேற்படி ஆழ்துளை கிணற்றின் பணி சரியாக செய்யப்பட்டுள்ளது என்பதனை உறுதிசெய்து கொள்ள வேண்டும்,

மேற்படி பணியில் திருப்தி இல்லையெனில் சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளருக்கு நோட்டீஸ் அளித்து, மீண்டும் மேற்படி கிணற்றில் பாதுகாப்பை உறுதி செய்ய உத்தரவிட வேண்டும்.

மேற்படி பாதுகாப்பு விஷயத்தில் நிலத்தின் உரிமையாளர் மேற்படி நிபந்தனைகளை முறையாக கடை பிடிக்க வில்லை எனில், உரிமத்தை ரத்து செய்யலாம்.

இதனையும் தாண்டி ஒரு நிலத்தின் உரிமையாளர் கைவிடப்பட்ட கிணற்றை மூடாமல் அப்படியே விட்டுவிட்டால், சம்பந்தப்பட்ட காவல்துறை ஆய்வாளர் இந்திய தண்டனைச் சட்ட பிரிவு 304-II படி நிலத்தின்/கிணற்றின் உரிமையாளர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து அவரை கைது செய்யலாம்.

மேற்கண்ட கடுமையான சட்டங்கள், ஒழுங்குமுறை, வழிகாட்டுதல்கள் உள்ள நிலையில் பொதுமக்கள் ஆழ்துளை கிணறு குறித்த விழிப்புணர்வுடன் தங்கள் பகுதியில் இருக்கும் கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகளை கண்டறிந்து மூடவைப்பதே சரியான தீர்வாக இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x