Published : 28 Oct 2019 09:33 PM
Last Updated : 28 Oct 2019 09:33 PM

சில ஆண்டுகளுக்கு முன்னர் கர்நாடகா அரசு மூடிய கைவிடப்பட்ட 1,47,786 ஆழ்துளைக் கிணறுகள்

சென்னை, பிடிஐ

2 வயது சிறுவன் சுஜித் வில்சனை மீட்க 72 மணிநேரத்துக்கும் மேலாக பலதரப்பினரும் போராடி வரும் நிலையில் கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளை மூடுவது, முதலில் கிணறுகளைத் தோண்டுவதற்கான சட்டக்கட்டுப்பாடுகள், விதிமுறைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என்ற விவாதங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாடு பஞ்சாயத்து ஆழ்துளைக் கிணறு விதிமுறைகள் பாதுகாப்பு ஒழுங்குமுறைச் சட்டம் என்ற ஒன்று உள்ளது. ஆழ்துளை கிணறு தோண்டும் எத்தனை பேருக்கு இந்தச் சட்டத்தின் விதிமுறைகள் தெரியும்,எத்தனை பேர் விதிமுறைகளைக் கடைபிடிக்கின்றனர், இந்த நடவடிக்கைகள் முறையாகக் கண்காணிக்கப்படுகிறதா என்ற கேள்விகள் எழுகிறது.

பாதுகாப்பு விதிமுறைகளைக் கட்டாயப்படுத்தும் அந்த சட்டம் பற்றி மூத்த வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “இப்படிப்பட்ட துயரச் சம்பவங்கள் நடைபெறும் போதுதான் நாம் விழித்துக் கொள்கிறோம். பிறகு மறந்து விடுகிறோம். விதிமுறைகள் பற்றிய முறையான புரிதல் இல்லை. மக்களும் ஒத்துழைப்பதில்லை.

என் வீட்டு காம்பவுண்டுக்குள் அரசு நுழைந்து சரி செய்ய வேண்டும் என்பது எதிர்பார்க்கக் கூடாத ஒன்று. என் காம்பவுண்டில் என் இடத்தில் இருக்கும் கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறு ஒழுங்காக, முறைப்படி மூடப்பட்டுள்ளதா என்பதை நான் உறுதி செய்வது எனது கடமையே, ஒரு தேசமாக மனித உயிருக்கு கொஞ்சம் கூட மதிப்பில்லாமல் போய் விட்டது” என்றார்.

இதே போன்று பஞ்சாபில் நடந்துள்ளது, அதன் பிறகு பஞ்சாபில் கண்டிப்பாக அனைத்து கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளும் மூடப்பட வேண்டும் என்று உறுதி செய்யப்பட்டது.

கர்நாடகா அரசு சில ஆண்டுகளுக்கு முன்பாகக் கூறிய போது குழந்தைகள் தவறி விழும் சம்பவங்கள் அதிகரிப்பால் 1,47,786 கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் மூடப்பட்டுள்ளது என்று தெரிவித்தது.

குழந்தைகள் தவறி விழும் துயரச்சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதையடுத்து 2010-ம் ஆண்டே உச்ச நீதிமன்றம் அனைத்து மாநிலங்களுக்கும் கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளை மூடவும், செயலில் இருக்கும் ஆழ்துளைக் கிணறுகளை முறையாக வேலியிட்டு பராமரிக்கவும் அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x