Published : 28 Oct 2019 08:29 PM
Last Updated : 28 Oct 2019 08:29 PM

சென்னையில் 2 நாட்களில் வெடிக்கப்பட்ட பட்டாசு கழிவுகள் 22,580 கிலோ: சென்னை மாநகராட்சி பாதுகாப்பாக அகற்றம்

சென்னை

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் தீபாவளி திருநாளை முன்னிட்டு 2 நாட்களில் வெடிக்கப்பட்ட 22.58 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை மற்றவர்களுக்கு பண்டிகை, ஆனால் அதில் வெடிக்கப்படும் பட்டாசுகள், அதன் கழிவுகள், ரசாயன கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு கேடு தருபவை. பட்டாசு வெடிப்பது மகிழ்ச்சியின் வெளிப்பாடு, அதன் பின்னர் பண்டிகை கோலாகலத்தை அனைவரும் கடந்துச் என்று விடுகிறோம்.

அதன் பின்னர்தான் சென்னை மாநகராட்சியின் பணி ஆரம்பமாகிறது. கடந்த 2 நாட்களாக சென்னை முழுதும் வெடிக்கப்பட்ட பட்டாசுகுப்பைகள், ரசாயன கழிவுகள் அகற்றப்படவேண்டும். அதற்காக சென்னை முழுதும் 15 மண்டலங்களிலும் சுமார் 20000 மாநகராட்சி பணியாளர்கள் சுழற்சிமுறையில் பணியாற்றி குப்பைகள், ரசாயனக்கழிவுகளை அகற்றினர்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்:

“பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் தீபாவளி திருநாள் பண்டிகை முன்னிட்டு 26.10.2019 மற்றும் 27.10..2019 ஆகிய இரு நாட்களில் 22.58 டன் பட்டாசு கழிவுகள் (Cracker Waste) சேகரிக்கப்பட்டது.

இந்தப் பட்டாசு கழிவு குப்பைகள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவுறுத்தலின்படி கும்மிடிபூண்டி அருகிலுள்ள சிப்காட் தொழிற்சாலை வளாகத்திலுள்ள, தொழிற்சாலை கழிவுகள் மேலாண்மை கூட்டமைப்பு நிறுவனத்தில் அபாயகரமான கழிவுகள் மையத்தில் (Hazardous Waste) ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

இதற்காக பெருநகர சென்னை மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் என மொத்தம் 19,585 பணியாளர்கள் சுழற்சி முறையில் துப்புரவு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்”.

இவ்வாறு சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x