

சென்னை
பட்டாசு வெடிப்பதற்கு உச்சநீதிமன்றம் வகுத்துக்கொடுத்த விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக சென்னையில் 179 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாடவேண்டும், காற்று மாசை குறைக்கவேண்டும், ஒலி அளவை குறைக்கவேண்டும் என்கிற அடிப்படையில் சில கட்டுப்பாடுகளை உச்சநீதிமன்றம் வகுத்து தந்து கடைபிடிக்க உத்தரவிட்டது.
அதன்படி தீபாவளியை முன்னிட்டு, காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. இதை கடைபிடிக்க காவல்துறை வலியுறுத்தி இருந்தது. ஆனாலும் தீபாவளி அன்று (27.10.2019) நீதிமன்றம் வரையறுத்த நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்தவர்கள் கண்டறியப்பட்டு அவகள்மீது வழக்கு தொடரப்பட்டது.
சென்னையின் நான்கு மண்டலங்களில் தொடரப்பட்ட வழக்குகள் குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள தகவல், “சென்னையில் வடக்கு மண்டலத்தில் 35 வழக்குகளும், மேற்கு மண்டலத்தில் 99 வழக்குகளும், தெற்கு மண்டலத்தில் 09 வழக்குகளும், கிழக்கு மண்டலத்தில் 36 வழக்குகளும் என மொத்தம் 179 வழக்குகள் புதிவு செய்யப்பட்டுள்ளது”.
இவ்வாறு காவல்துறை தெரிவித்துள்ளது.