

ராமேசுவரம்
குழந்தை சுஜித் மீட்கப்பட இந்தியாவைத் தாண்டி கடல் கடந்து இலங்கையிலும் பிரார்த்தனைகள் நடைபெற்றன.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் பிரிட்டோ. இவருடைய மனைவி கலாமேரி. இவர்களுடைய மகன்கள் புனித் ரோசன் (வயது 4), சுஜித் வில்சன் (வயது 2). கடந்த 25-ம் தேதி மாலை 5.40 மணி அளவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கிருந்த ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துவிட்டான். அன்று தொடங்கிய மீட்புப் பணி திங்கட்கிழமை 4-வது நாளாகவும் முழுவீச்சில் நடந்துவருகிறது
தமிழகத்தைச் சேர்ந்த பிரபலங்கள், பொது மக்கள் என அனைவருமே சுஜித் நலமுடன் திரும்பப் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். தொடர்ச்சியாக #PrayforSurjith, #PrayforSujith ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்விட்டர் பக்கத்தில் ட்ரெண்ட்டாகி வருகின்றன.
இந்நிலையில், ஆழ் கிணற்றில் சிக்கித் தவிக்கும் குழந்தை சுஜித் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என இலங்கையிலும் பல பகுதிகளிலும் மக்கள் திரண்டு பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
யாழ்ப்பாணம் கோப்பாயில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்திற்கு வலிகாம் கிழக்குப் பிரதேச சபை செயலாளர் தியாகராஜா நிரோஷ் தலைமை வகித்தார்.
இந்த பிரார்த்தனைக் கூட்டம் குறித்து தியாகராஜா நிரோஷ், "தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தை கூட மக்கள் புறக்கணித்து விட்டு குழந்தை காப்பாற்றப்பட்டுவிட்டதா? என்ற ஏக்கத்துடன் இரவு பகலாக தமிழகத்திலிருந்து நேரடி ஒளிபரப்பு செய்யும் தொலைக்காட்சி அலைவரிசைகள் வாயிலாக பார்த்தவாறே காத்திருக்கின்றோம் .
இலங்கையில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது ஆயிரக்கணக்கில் மக்கள் கொன்றுகுவிக்கப்படும்போது தமிழக மக்களின் மனம் எந்தளவு பதைத்ததோ அதுபோன்ற பதைபதைப்பினையும் பிரார்த்தனையினையும் ஈழத்தமிழர்களான நாங்கள் மேற்கொண்டிருக்கின்றோம்" எனத் தெரிவித்தார்.
எஸ். முஹம்மது ராஃபி