Published : 28 Oct 2019 04:06 PM
Last Updated : 28 Oct 2019 04:06 PM

சென்னையில் 24 மணி நேரத்தில் 3 கொலை : மயிலாப்பூரில் பறித்த செல்போனை  திருப்பி கேட்ட இளைஞர் குத்திக்கொலை 

சென்னை

சென்னையில் 24 மணி நேரத்தில் 3 வெவ்வேறு இடங்களில் தொழிற்சங்க தலைவர் உட்பட 3 பேர் ரவுடி கும்பலால் கொல்லப்பட்டுள்ளனர்.

சென்னையில் தீபாவளி பண்டிகை குற்றச் சம்பவங்கள் இல்லாமல் முடியவேண்டும், விபத்தில்லா தீபாவளியாகக் கழியவேண்டும் என்பதில் காவல் துறையினர் விழிப்புடன் இருப்பார்கள். இந்த ஆண்டு தீபாவளி அன்றும் அதற்கு மறுநாளும் 24 மணி நேரத்தில் தலைநகர் சென்னையில் 3 கொலைகள் நடந்துள்ளன.

முதல் கொலை ஐசிஎப் நேற்று இரவு ஐசிஎப் அண்ணா தொழிற்சங்க செயலாளர் பெரவள்ளூர் அருகே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார், இரண்டாவது கொலை மெரினா நொச்சிக்குப்பத்தில் இளைஞர் கொல்லப்பட்டார், மூன்றாவது கொலை பாடி புதுநகரில் இன்று மதியம் இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்டார்.

முதல் கொலை:

சென்னை வில்லிவாக்கம் ராஜமங்கலம் ஏழாவது தெருவைச் சேர்ந்தவர் ஜானகி ராமன்(50). இவர் ஐசிஎப்-ல் பிட்டராக பணியாற்றி வந்தார். ஐசிஎப் அண்ணா தொழிற்சங்கத்தின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். தீபாவளி தினமான நேற்று இரவு 10.00 மணியளவில் அளவில் கொளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பட்மேடு சுடுகாடு அருகே, தனது இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வழிமறித்து அவரது தலையில் வெட்டி கொடூரமான முறையில் படுகொலை செய்துவிட்டுத் தப்பி ஓடியுள்ளனர்.

கொலைக்குறித்த தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு வந்த பெரவள்ளூர் போலீஸார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் ஜானகி ராமன் அப்பகுதியில் உள்ள ஸ்ரீதேவி இளங்காளியம்மன் கோவிலில் செயலாளராக இருந்து வந்துள்ளார் .

நேற்று தீபாவளி சிறப்புப் பூஜையின்போது கோவில் பூசாரியான ஓம் பிரகாஷ்(23) என்பவர் கஞ்சா போதையில் கோயிலுக்குள் வந்ததுள்ளார். இதை ஜானகி ராமன் கண்டித்து கோவில் பூசாரியைக் கோவிலை விட்டு வெளியேற்றி உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கோவில் பூசாரி ஓம் பிரகாஷ் நண்பர்களுடன் வந்து கொலை செய்தாரா? அல்லது அண்ணா தொழிற்சங்கத்தில் செயல்படுவதில் முன்விரோதம் எதுவும் இருந்து அதனால் கொலை நடந்ததா? என்கிற கோணத்தில் விசாரணை நடத்துகின்றனர்.

ஜானகி ராமன் கொலை சம்பந்தமாக போலீஸார், இரண்டு பேரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள கோவில் பூசாரி ஓம்பிரகாஷை போலீஸார் தேடி வருகின்றனர்.

இரண்டாவது கொலை:

இரண்டாவது கொலை இன்று காலை நொச்சி நகரில் நடந்துள்ளது. செல்போனை பறிகொடுத்த அப்பாவி இளைஞர் அதை கேட்டுப்போனபோது செல்போனை பறித்த நபரால் குத்திகொல்லப்பட்டார்.

மயிலாப்பூர் மாயாண்டிகாலனியில் வசித்தவர் கார்த்திக் (24). இவர் நேற்று தீபாவளி பண்டிகையையொட்டி தனது நண்பர்களுடன் தனது இருசக்கர வாகனத்தில் கலங்கரை விளக்கம் அருகிலுள்ள நொச்சி நகரில் நண்பர்களை பார்க்க சென்றிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த பூபாலன் என்பவர் கார்த்திக்கிடம் தகராறு செய்துள்ளார்.

பின்னர் அவரது செல்போனை பிடுங்கி வைத்துக் கொண்டுள்ளார். அக்கம்பக்கத்தினர் இன்று எதுவும் பிரச்சினை வேண்டாம் என கார்த்திக்கை மறுநாள் வந்து செல்போனை வாங்கிக்கொள்ளச் சொல்லி அனுப்பியுள்ளனர். இன்று காலை தனது செல்போனை வாங்குவதற்காக நொச்சி நகர் வந்த கார்த்திக், பூபாலனைச் சந்தித்து செல்போனை தரும்படி கேட்டுள்ளார்.

அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், பூபாலன் மறைத்து வைத்திருந்த கத்தியால் கார்த்திகை சரமாரியாகக் குத்தியுள்ளார். ரத்தவெள்ளத்தில் கார்த்திக் கீழே விழுந்துள்ளார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் கார்த்திகை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே கார்த்திக் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு ராயப்பேட்டை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. கொலைச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள மெரினா போலீஸார் பூபாலனைத் தேடி வருகின்றனர்.

மூன்றாவது கொலை:

மூன்றாவது கொலை பாடி புதுநகரில் நடந்துள்ளது. இங்கு மதியம் 12 மணி அளவில் இளைஞர் ஒருவர் 5 பேர்கொண்ட கும்பலால் வெட்டிக்கொல்லப்பட்டார்.

ஜெ.ஜெ.நகர் காவல் எல்லைக்குட்பட்ட அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம், பாடி புதுநகர், 13 வது தெருவில் வசிப்பவர் ராமகிருஷ்ணன் (52). இவரது இரண்டாவது மகன் அழகு முருகன்(24). வேலை எதுவும் இல்லை. இன்று பகல் 12 மணி அளவில் இவர் தனது வீட்டிலிருந்து புறப்பட்டு 12 வது தெருவழியாக வந்துகொண்டிருந்தார்.

அப்போது ஒருகும்பல் இவரை வழிமறித்து கத்தியால் வெட்ட முயன்றுள்ளது. இதைப்பார்த்த அழகு முருகன் அவர்களிடம் சிக்காமல் தப்பி ஓடியுள்ளார். ஆனால் அவரை விடாமல் விரட்டிச் சென்ற கும்பல் 11 வது தெரு 15 வது தெருமுனை சந்திப்பில் அழகு முருகனைச் சரமாரியாக வெட்டிக்கொன்றது. பின்னர் அனைவரும் தப்பி ஓடிவிட்டனர்.

அழகு முருகன் கொலை செய்யப்பட்டது குறித்துக் கேள்விப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த அவரது பெற்றோர் உறவினர்கள் உடல் அருகே அமர்ந்து கதறி அழுதனர். பின்னர் ஜெ.ஜெ.நகர் போலீஸார் வந்து உடலைக்கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸார் நடத்திய விசாரணையில் ஒரு வருடம் முன்னர் நடந்த ஒருவரின் இறுதி ஊர்வலத்தில் சிவலிங்கம் என்பவர் வெட்டிக்கொல்லப்பட்டார். அந்த சம்பவத்தில் உடனிருந்ததாக அழகு முருகன் கைது செய்யப்பட்டதாகவும், பின்னர் வெளியே வந்த அவர் வேலைக்கு எதுவும் செய்யாமல் நண்பர்களுடன் சுற்றி பொழுதைக் கழித்ததாகவும் கூறப்படுகிறது.

தற்போது அந்த கொலைச் சம்பத்தில் பழிக்குப் பழி வாங்கக் கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் முன்பகையா என்கிற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x