

2019, ஜூன் 5ம் தேதி சங்ரூர் மாவட்டம், பகவான்புரா கிராமத்தில் அந்த துயர சம்பவம் நடந்தது.
அரசின் முகத்தில் அறையப்பட்ட அந்த நிகழ்வுக்குப்பின் விழித்துக்கொண்ட பஞ்சாப் அரசு காலத்துக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் உத்தரவை பிறப்பித்தது.
அதேபோன்ற சம்பவத்துக்குச் சற்றும் குறைவில்லாமல் திருச்சி மணப்பாறையையடுத்து நடுகாட்டுப்பட்டியில் இப்போது நடந்தேறி வருகிறது.
பகவான்புரா கிராமத்தில் நடந்தது என்ன?
கடந்த ஜூன் 5-ம் தேதி, பகவான்புரா கிராமத்தைத் சேர்ந்த 2 வயது குழந்தை பதேவிர் சிங் வழக்கம் போல் தன்னுடைய வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தான்.
பயன்பாடின்றி, பிளாஸ்டிக் சாக்குகொண்டு மூடப்பட்ட இருந்த 7 இன்ச் அகலம் 300 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றுக்குள் திடீரென பதேவிர் சிங் உள்ளே விழுந்து 150 ஆழத்தில் சிக்கி அபயக் குரல் எழுப்பினான். பதேவிர் சிங் பெற்றோருக்கு ஒரே குழந்தை என்பதால், அவனைக் காப்பாற்றப் பெற்றோர் துடித்தனர்.
குழந்தை பதேவிர் சிக்கிக் கொண்டதை அறிந்து உடனடியாக பேரிடர் மீட்புப்படை, மருத்துவக்குழு, தீயணைப்பு படை எனப் பலரும் வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டார்கள்.
தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு உலக நாடுகளுக்குச் சவால் விடுக்கும் வகையில் வளர்ந்து நம்மவர்கள், குழிக்குள் விழுந்த குழந்தையை மீட்கும் நுட்பத்தை அறியவில்லை.
குழந்தை பதேவிர் சிங் விழுந்த குழிக்கு அருகே மற்றொரு குழி தோண்டப்பட்டு குழந்தையை மீட்கும் பணி நடந்தது. 150 அடி ஆழத்தில் சிக்கிய குழந்தை பதேவிர் சிங்கை மீட்க ஏறக்குறைய 108 மணிநேரப் போராட்டம் நடந்தது. தேசியப் பேரிடர் மீட்புப்படை, தீயணைப்புப் படையினர், ராணுவம் அனைவரும் 6 நாட்கள் இரவுபகலாக முயன்றார்கள்.
ஆனால், 108 மணிநேரப் போராட்டத்துக்குப்பின், குழந்தையை உயிருடன் மீட்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.
இந்த சம்பவம் பஞ்சாப் அரசை மட்டுமல்ல, அந்த மாநிலத்தில் உள்ள மக்களின் மனதையும் உலுக்கியது. திருச்சி நடுகாட்டுப்பட்டி மீது வெளிச்சம் பாய்ச்சும் ஊடகங்கள், அன்றும் பகவான்புரா கிராமத்தின் மீது கவனத்தைக் குவித்தன.
குழந்தை பதேவிர் சிங் சடலமாக மீட்கப்பட்டபோது இரவு பகல் பாராது, தூக்கமின்றி, உணவின்றி அதிகாரிகள், தொழில்நுட்ப பணியாளர்கள், ஊடக செய்தியாளர்கள் என அனைவரின் இதயமும் நொறுங்கிவிட்டது.
மாநிலத்தில் கடைசி நிகழ்வாக இது அமைய வேண்டும் என்று உணர்ந்த பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் உடனடியாக அரசாணை பிறப்பித்தார். மாநிலத்தில் உள்ள கேட்பாரற்று கிடக்கும் அனைத்து ஆழ்துளைக் கிணறுகளையும் ஒருமாதத்துக்குள் மூட வேண்டும் என்று அதிகாரிகளுக்குக் கெடு விதித்து உத்தரவிட்டார்.
தலைமைச் செயலாளர் தலைமையில் பேரிடர் மீட்புக் குழு அதிகாரிகள் அமைக்கப்பட்டு மாநிலத்தில் கேட்பாரற்று கிடக்கும் அனைத்து ஆழ்துளைக் கிணறுகளையும் கண்டுபிடித்து மூடும் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டது.
கேட்பாரற்று கிடக்கும், சரியாக மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளைக் கிணறுகள் குறித்து தகவல் அளிப்போருக்கு ரூ.5 ஆயிரம் வெகுமதியும் அளிக்கப்படும் என்று பஞ்சாப் அரசு உத்தரவிட்டது.
ஆழ்துளைக் கிணறுகளைச் சரியாகப் பராமரிக்காமல் மூடாமல் வைத்திருப்பதைக் கண்டுபிடித்தால் நில உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்தது. இந்த நடவடிக்கைக்குப்பின் பஞ்சாப் மாநிலத்தில் விழிப்புணர்வு ஏற்பட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பராமரிக்கப்படாத ஆழ்துளைக் கிணறுகள் மூடப்பட்டன.
இதேபோன்று தான் நடுகாட்டுப்பட்டி சுஜித் வில்சன் தற்போது, ஆழ்துளைக் கிணற்றில் 88 அடி ஆழத்தில் கடந்த 4 நாட்களாகச் சிக்கி இருக்கிறான். உண்ண உணவின்றி, குடிக்கச் சொட்டு நீரின்றி, முறையான ஆக்சிஜன் இன்றி குழந்தை சுஜித் சிக்கி இருக்கிறான்.
அவனை உயிருடன் மீட்க பேரிடர் மீட்புக் குழுவினர், ஓஎன்ஜிசி அதிகாரிகள், தீயணைப்பு வீரர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் அனைவரும் முயன்று வருகிறார்கள். ஏறக்குறைய 65 மணிநேரத்துக்கும் மேலாக முயற்சி தொடர்ந்து வருகிறது.
தமிழகம் கடந்து உலகம் முழுதும் உள்ள பொதுமக்கள் சுஜித் உயிரோடு திரும்பி வரப் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
இப்போது, நம்முன் எழும் கேள்வியெல்லாம் முதலில் இந்த பூமியை மனிதர்கள் வாழத் தகுதியான இடமாக மாற்ற என்ன செய்யப் போகிறோம் என்பதுதான்.
ஒவ்வொரு ஆண்டும் இதேபோன்று ஏதாவது ஆழ்துளைக் கிணற்றுக்குள் வளரும் பிஞ்சுக் குழந்தைகள் சிக்குவது தொடர்ந்து வருகிறது. இதை நிரந்தரமாகத் தடுக்க அரசு என்ன தீர்க்கமான நடவடிக்கை எடுத்துள்ளது? ஆனால், ஆழ்துளைக் கிணறுகளில் விழும் பிஞ்சுகளைக் காப்பாற்ற எந்திரங்களைக் கண்டுபிடிக்காத சமூகம், கோடிக்கணக்கில் செலவு செய்து, சந்திராயன், மங்கள்யான், எனத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் என்ன பயன்?
சுஜித் நிகழ்வுக்குப்பின் வேறு ஒரு பரபரப்பு சம்பவம் நம்மை பற்றிக்கொள்ளும். சுஜித் சம்பவம் காலப்போக்கில் மறக்கடிக்கப்படும். இதுதான் வழக்கமாக நடந்து வருகிறது.
ஒவ்வொரு முறையும் மரணத்துக்காகக் காத்திருந்து கண்ணீர் விடும் சமூகமாக மாறிவிட்டோமா. ஆழ்துளைக் கிணறு மரணங்கள் ஜனிக்காத நாட்களில் நாம் அதைப் பற்றிச் சிந்திக்கிறோமா, பேசுகிறோமா, நிரந்தரமாகத் தடுக்க முயற்சிகளை முன்னெடுத்தோமா என்பது நம்முன் எழுந்துள்ள கேள்வி.
ஒரு மரணத்துக்கும் மற்றொரு மரணத்துக்கும் இடைப்பட்ட இடைவெளியில் நாம் சிந்தித்து அதுபோல் நடக்காமல் தடுக்க முன்னெடுக்கும் செயல்களே மாற்றத்தைக் கொண்டுவரும்.
அந்த மாற்றத்தைப் பஞ்சாப் அரசு சரியாக நிகழ்த்திக் காட்டி முன்னெடுத்துவிட்டது.
நடுக்காட்டுப்பட்டி நிகழ்வு பத்தோடு பதினொன்றுதான் என நாம் கடந்து செல்லப் போகிறோமா, அல்லது இதுதான் கடைசி நிகழ்வாகத் தமிழகத்தில் இருக்கப்போகிறதா...
தமிழக அரசு என்ன செய்யப் போகிறது....சுஜித்தின் குரல் கேட்கவில்லையா.......
போத்திராஜ்..