வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ; மணப்பாறை - நடுக்காட்டுப்பட்டியில் மழை நிலவரம் என்ன?- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ; மணப்பாறை - நடுக்காட்டுப்பட்டியில் மழை நிலவரம் என்ன?- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Published on

சென்னை

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு இலங்கை அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளதால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ள வானிலை ஆய்வுமையம் சுஜித் சிக்கியுள்ள நடுக்காட்டுப்பட்டியின் மழை நிலவரம் குறித்தும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:

“தென்மேற்கு வங்கக்கடல் பகுதி மற்றும் தெற்கு இலங்கை அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது. இது குமரிக் கடலை நோக்கி நகர்ந்து வலுப்பெறும், 30,31 தேதிகளில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு மாலத்தீவு பகுதிகளை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.

அடுத்த இரு தினங்களுக்குத் தென் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு. கன மழையைப் பொறுத்தவரைக் கன்னியாகுமரி,நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மதுரை, புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் வட தமிழகத்தைப் பொறுத்தவரைத் திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம்,வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைப் பதிவாகி உள்ளது,அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் வல்லம் மற்றும் குமரி மாவட்டம் வட்டார பகுதிகளில் 7 செ.மீ. மழைப் பதிவாகி உள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

இன்றுமுதல் அடுத்துவரும் 4 தினங்களுக்கு (28,29,30,31 ஆகிய தேதிகளில்) மீனவர்கள் மன்னார் வளைகுடா, தென் தமிழகக் கடல் பகுதிகள்,குமரிக்கடல் பகுதி, மாலத்தீவு மற்றும் லட்ச தீவுப் பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசானதுமுதல் மிதமான மழை நகரின் ஒரு சில இடங்களில் பெய்ய வாய்ப்புள்ளது.

நடுக்காட்டுப்பட்டி நிலவரம்:

மணப்பாறை நடுக் காட்டுப்பட்டியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அங்கு வானிலை நிலவரங்கள் குறித்துத் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது,

இது குறித்துச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தொடர்ந்து தகவல்களைக் கொடுத்து வருகிறோம். மணப்பாறையைப் பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு மட்டுமே வாய்ப்பு.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in