Published : 28 Oct 2019 01:46 PM
Last Updated : 28 Oct 2019 01:46 PM

பெரியார் பல்கலைக் கழகத்தில் பெரியாரை அவமதிப்பதா? - வீரமணி கண்டனம்

சென்னை

பெரியார் பல்கலைக் கழகத்தின் நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்; இல்லையேல், இதனை மக்கள் பிரச்சினையாக வீதிக்குக் கொண்டு வரும் வகையில் முதற்கட்டமாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘கடந்த 24.10.2019 அன்று சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற 19 ஆவது பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், கேரள முன்னாள் ஆளுநர் சதாசிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இவ்விழாவிற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தன; இதில்தான் இப்பொழுது சர்ச்சை எழுந்துள்ளது

விழாவிற்கான அழைப்பிதழில் பேராசிரியர்கள், ஆட்சி பேரவை உறுப்பினர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரையும் விட்டு விட்டு அச்சடித்தலில் தொடங்கியது சர்ச்சை. இப்பொழுது பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அனைவரையும் விட்டு விட்டு அழைப்பிதழ் அச்சடித்திருப்பது வேதனைக்குரிய ஒன்றாகும்.

ஏனென்றால் பட்டமளிப்பு விழாவிற்கான பட்டச் சான்று தயார் செய்தல் முதல் பட்டமளிப்பு விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கவனிப்பது இவர்கள்தான்; இவர்களைப் புறக்கணித்ததால் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் பட்டமளிப்பு விழா வேலைகள் நடந்து முடிந்தவுடன் யாரும் உணவருந்த செல்லாமல் புறக்கணித்தனர்.

பணியாளர்கள்தான் புறக்கணிக்கப்பட்டனர் என்று பார்த்தால், யார் பெயரில் பல்கலைக்கழகம் இயங்குகிறதோ அந்த தந்தை பெரியாரின் படத்தைக் கூட அழைப்பிதழில் போடாமல் புறக்கணிக்க வைத்த சக்தி எது என்று ஆராய வேண்டியுள்ளது மட்டுமல்லாமல், பெரியார் சிலைக்குப் பின்னணியில் பிள்ளையார் சிலை, ஸ்வஸ்திக் சின்னம், சூலாயுதம் ஆகிய சின்னங்களை வண்ண விளக்குகள் (சீரியல் பல்பு) மூலம் இடம் பெறச் செய்தது ஏதோ தெரியாமல் செய்தது அல்ல.

கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதி எந்த மக்கள் பிரதிநிதியும் இல்லாத எச்.ராஜா, துணைவேந்தர் இல்லாத நிலையில் துணைவேந்தர் அறைக்குள் பாஜக பிரதிநிதிகள் 19 பேர், பதிவாளர் (பொறுப்பு) தங்கவேல், தமிழ்த்துறைத் தலைவர் பெரியசாமி, ஆர்எஸ்எஸ் பிரதிநிதியும், ஆட்சிக்குழு உறுப்பினருமான குமாரசுவாமி ஆகியோருடன் சுமார் ஒன்றரை மணிநேரம் ஆலோசனை நடத்தியது அப்போதே பலத்த சர்சையை கிளப்பியது.

புதிய துணைவேந்தர் வந்த பின், மதச்சார்பற்ற நிலையில் இயங்கி வந்த பெரியார் பல்கலைக் கழகத்தின் வடிவம் மாற்றப்பட்டு வருகிறது. துணைவேந்தர் அறையில் திடீரென சரஸ்வதி படம் பெரிய அளவில் மாட்டப்பட்டுள்ளது.
அண்ணா பெயரில் தி.மு.க.வையும் இணைத்துள்ள அண்ணா தி.மு.க. ஆட்சியில், தந்தை பெரியார் அவமதிக்கப்படுவது வெட்கக்கேடு!

இதுகுறித்து தமிழக அரசிடமிருந்து விளக்கம் தேவை. ஆர்எஸ்எஸ் கூடாரமாக இருந்துவரும் பெரியார் பல்கலைக் கழகத்தின் நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்; இல்லையேல், இதனை மக்கள் பிரச்சினையாக வீதிக்குக் கொண்டு வரும் வகையில் முதற்கட்டமாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கிறோம்.

திருந்த மறுத்தால் பல்வேறு அனைத்துக் கட்சிகள் ஒருங்கிணைந்த போராட்டங்களும் தொடரக்கூடும். பெரு நெருப்புடன் விளையாடாதீர் - பெரியாருக்கு அவமரியாதையா - பொறுக்க முடியாது’’ என வீரமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x