

சென்னை
ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தை சுஜித்தை மீட்க 63 மணிநேரத்துக்கும் மேலாக மீட்புப்பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
ஓஎன்ஜிசி நிறுவனத்திடமிருந்து கொண்டுவரப்பட்ட இரு ரிக் இயந்திரங்கள் மூலம் துளையிடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதுவரை 40 அடிக்கு குழி தோண்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் பிரிட்டோ. இவருடைய மனைவி கலாமேரி. இவர்களுடைய மகன்கள் புனித் ரோசன் (வயது 4), சுஜித் வில்சன் (வயது 2). கட்டிட தொழிலாளியான பிரிட்டோ வீட்டின் அருகே விவசாயமும் செய்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் தன்னுடைய நிலத்தில் விவசாயப்பணிக்காக 600 அடி ஆழத்தில் ஆழ்துளைக் கிணறு தோண்டினார். காலப்போக்கில் அந்த கிணற்றில் தண்ணீர் இல்லாமல் போனதையடுத்து, அந்த ஆழ்துளைக் கிணற்றை முறையாக மூடாமல் விட்டுவிட்டார்.
இந்நிலையில், கடந்த 25-ம் தேதி மாலை 5.40 மணி அளவில் அந்த நிலப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சுஜித் வில்சன் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து விட்டான். இது குறித்து அறிந்து குழந்தை சுஜித்தின் தாய் கலாமேரி, அருகில் உள்ள மருத்துவமனை, தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து, அங்கு வந்த மருத்துவக் குழுவினர் குழந்தை சுஜித்துக்கு செயற்கை சுவாசம் அளித்தனர்.
மேலும், சுஜித் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த தகவல் அரசுக்கு தெரிவிக்கப்பட்டவுடன் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், தங்கமணி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப்பணியைத் துரிதப்படுத்தினார்கள்.
மதுரை, திருச்சி, சென்னை உள்ளிட்ட இடங்களிலிருந்தும் தன்னார்வ குழுக்களும் வந்து மீட்புப்பணிக்காக உதவி வருகின்றனர். முதலில் 23 அடி ஆழத்திலிருந்த குழந்தை சுஜித்தை அடுத்தடுத்து மீட்புப்பணியில் ஏற்பட்ட முயற்சியில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக, தற்போது 88 ஆழத்தில் இருக்கிறான்.
குழந்தை சுஜித்தை உயிருடன் மீட்கும் நோக்கில் ஆழ்துளைக் கிணறு அருகே 2 மீட்டர் தொலைவில் 1 மீட்டர் அகலம், 110 அடி ஆழத்தில் குழி ஒன்று அமைக்க முடிவு செய்யப்பட்டது அதில் இருந்து சுரங்கம் மூலம் ஆழ்துளைக் கிணற்றுக்குள் செல்ல திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக ஓஎன்ஜிசி நிறுவனம் மூலம் இரு ரிக் எந்திரங்கள் கொண்டுவரப்பட்டன.ரிக் இயந்திரம் மூலம் சுரங்கம் தோண்டும் பணி ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கப்பட்டது. முதல் ரிக் இயந்திரம் 35 அடி ஆழம் குழி தோண்டியது. அப்போது அந்த இயந்திரம் பழுதானது.
இதையடுத்து அதிகமான திறன் கொண்ட 2-ஆவது ரிக் இயந்திரம் ராமநாதபுரத்திலிருந்து கொண்டு செல்லப்பட்டுக் குழி தோண்டப்பட்டு வருகிறது. கடினமான பாறைகளால் 2-து ரிக் இயந்திரத்திலும் பழுது ஏற்பட்டதால், சென்னையிலிருந்து அதிநவீன ஆகாஷ் எனும் குழிதோண்டப் பயன்படும் பிட் கொண்டு செல்லப்பட்டுள்ளது. 2-ஆவது ரிக் இயந்திரம் குழி தோண்டும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது, இதுவரை 40 அடி வரை குழி தோண்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குழந்தை சுஜித்தை மீட்க குழிக்குள் இறங்கவுள்ள 3 தீயணைப்பு வீரர்களுக்கும் தகுந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ள நிலையில், ஆக்சிஜன் சிலிண்டர், கேமரா, விளக்குகள் ஆகியவற்றுடன் மீட்புப்படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். குழந்தை சுஜித்தை மீட்கும் பணி தொடர்ந்து 63 மணிநேரமாக நடந்து வருகிறது.
மீட்புப்பணி நடக்கும் இடத்தில் அமைச்சர் விஜய பாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், உதயகுமார், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர், ஜி.கே.வாசன் ஆகியோர் உள்ளனர்.
குழந்தை சுஜித்தை மீட்கும் பணியை பார்வையிட துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சம்பவ இடத்திற்கு வந்தார். அவரிடம் நடைபெற்று வரும் மீட்பு பணி குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கி கூறினார்.