

எழுந்து வா தங்கமே.வேதனையோடு ஒரு தீபாவளி என்று சுஜித் மீட்பு தொடர்பாக ஹர்பஜன் சிங் வேதனையுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
திருச்சி, மணப்பாறை நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் 2 வயதுக் குழந்தை சுஜித் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்து 50 மணி நேரத்தைக் கடந்துள்ளது. அவரை பத்திரமாக மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தமிழகத்தைச் சேர்ந்த பிரபலங்கள், பொது மக்கள், இணையவாசிகள் என அனைவருமே சுஜித் நலமுடன் திரும்ப பிரார்த்தனை செய்து வருவதாகத் தெரிவித்து வருகிறார்கள். தொடர்ச்சியாக #PrayforSurjith, #PrayforSujith, #PrayforSurjit ஆகிய ஹேஷ்டேக்குகளில் பலரும் சுஜித் நலமுடன் திரும்ப தங்களுடையக் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் குழந்தை சுஜித் தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பதிவில், "நானும் ஒரு குழந்தையோட தகப்பன் அந்த வகையில என்னால சுர்ஜித் பெற்றோரின் வலியை உணர முடியுது. அந்த குழந்தை உயிர் பொழைச்சு வரணும் உன் தாய்ப்பால்ல வீரம் இருக்கு கண்ணு நிச்சயம் வருவ நீ. தம்பி நீ வந்தாதான் எல்லாருக்கும் உண்மையான தீபாவளி. எழுந்து வா தங்கமே. வேதனையோடு ஒரு தீபாவளி.
நிலவில் நீர், செவ்வாயில் குடியிருப்பு, எதற்காக இத்துணைக் கண்டுபிடிப்புகள்? நூறு அடியில் உயிரொன்று ஊசலாடுகையில் விஞ்ஞானமும் நாமும் எதற்கு. சுர்ஜித் பூமி தாய் வயிற்றில் கருவாகி இருக்கிறாய். பிரசவ வலி அந்த தாய்க்குப் பதில் உனக்குப் பொறுத்துக்கொள் சாமி. விழித்துக்கொள் தேசமே" என்று தெரிவித்துள்ளார் ஹர்பஜன் சிங்.