

சென்னை
மாநகராட்சி சுகாதாரத் துறை சார்பில் டெங்கு காய்ச்சல் அறிகுறி அடிப்படையில் டெங்கு ஒழிப்பு பணிகளைமேற்கொள்ளாததால், சென்னையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரும், டெங்கு அறிகுறியுடன் உயிரிழப்போரும் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு 3,400 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டமாக சென்னை அறிவிக்கப்பட்டுள்ளது. எண்ணிக்கை குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 30 நோயாளிகள் அதிகம் என பதில் அளிக்கின்றனர்.
தமிழகத்தின் பிற பகுதிகளைவிட டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் உயிரிழப்போர் சென்னையில் அதிகரித்து வருகின்றனர்.
டெங்கு காய்ச்சல் ஏற்பட்ட நபருக்குதொடக்கத்தில் கண்ணின் உள் பகுதியில் கடுமையான வலி இருக்கும். தாங்க முடியாத தலைவலி ஏற்படும். எலும்புகள் இணையும் மூட்டு பகுதிகளிலும் வலி இருக்கும்.
டெங்கு காய்ச்சலை எலைசா ரத்த பரிசோதனை மூலம் உறுதி செய்ய முடியும். பல நேரங்களில் ரத்த பரிசோதனையில் டெங்கு இல்லை என கூட வரலாம். ஆனால் மேற்கூறிய அறிகுறிகள் அடிப்படையில், டெங்கு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றுதமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாநகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கிஉள்ளது.
ஒருங்கிணைப்பில் அலட்சியம்
ஒருவர் காய்ச்சலுடன் மருத்துவமனைக்கு வந்தால், அவரிடம் டெங்குவுக்கான அறிகுறி ஏதேனும் உள்ளதா என மருத்துவர்கள் பரிசோதிக்க வேண்டும். அறிகுறிகள் தென்பட்டால், உடனே அவரது வீட்டில் வேறு யாருக்கேனும் காய்ச்சல் உள்ளதா என விசாரிக்க வேண்டும். பின்னர் அது தொடர்பான விவரங்களை உடனடியாக, உயர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட வார்டு சுகாதார அதிகாரி மற்றும் பூச்சியியல் வல்லுநர்களுக்கு அனுப்ப வேண்டும். அவர்கள் நோயாளியின் வீடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் குப்பைகளை அகற்றி, கொசுப் புழு உருவாக வாய்ப்புள்ள ஆதாரங்களை அழிக்க வேண்டும்.
வளர்ந்த கொசுக்களை அழிக்க புகை மருந்தை பரப்ப வேண்டும். ஆனால் இந்த வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை மாநகராட்சி நிர்வாகம் முறையாக கடைபிடிப்பதில்லை எனவும், மருத்துவமனைகளில் இருந்து வார்டு சுகாதார அலுவலர் மற்றும் பூச்சியியல் வல்லுநர்களுக்கு, காய்ச்சல் தொடர்பான விவரங்கள் முறையாக அனுப்பப்படுவதில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த 15-ம் தேதி டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன், சோர்வடைந்த நிலையில் இளைஞர் ஒருவர், மற்றொருவர் உதவியுடன் வில்லிவாக்கம் ஆரம்ப சுகாதாரநிலையத்துக்கு காலை 11.30 மணிக்குச் சென்றுள்ளார். அப்போது, புறநோயாளிகள் சிகிச்சை முடிந்துவிட்டதாக பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நோயாளி கெஞ்சிய பிறகு மருத்துவரைப் பார்க்க அனுமதிக்கப்பட்டார். அதற்கு முன்பாக, சிகிச்சை விவரங்களை எழுத கட்டாயம் சிறிய நோட்டுபுத்தகம் வாங்கிவருமாறும் பணியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர். நோயாளியைபரிசோதித்த மருத்துவர், மருந்து கொடுத்து அனுப்பியுள்ளார். நோயாளியின் குழந்தைக்கும் டெங்கு காய்ச்சல் அறிகுறி இருந்துள்ளது. ஆனால் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் நோயாளி வந்த விவரத்தை, சம்பந்தப்பட்ட வார்டு சுகாதார அலுவலருக்கும், பூச்சியியல் வல்லுநர்களுக்கும் தெரிவிக்கவில்லை.
இதேநிலைதான் சில ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிலவுவதாகவும், இதன்காரணமாகவே, சென்னையில் பலர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவதாகவும், டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று உயிரிழப்பதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, “டெங்கு ஒழிப்பில் சிறப்பு கவனம் செலுத்தி கட்டுப்படுத்தப்படும்”என்றனர்.