

சென்னை
தீபாவளியையொட்டி, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள பசுமைப் பட்டாசுகளை மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.
தீபாவளிப் பண்டிகை இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. பொதுவாகமக்கள், தீபாவளிக்கு ஒரு மாதத்துக்கு முன்பே புத்தாடைகளை எடுத்துவிடுவார்கள் ஆனால்,சில நாட்களுக்கு முன்பே பட்டாசு,இனிப்பு விற்பனை சூடு பிடிக்கும். அதுவும் தீபாவளிக்கு முதல்நாள் பட்டாசுக் கடைகளில் கூட்டம் அலைமோதும்.
அதன்படி, தீபாவளிக்கு முதல்நாளான நேற்று சென்னையில் தீவுத்திடல், ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானம், வடபழனி, கொட்டிவாக்கம், போரூர், நந்தம்பாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் பட்டாசுக் கடைகளில் மக்கள் குடும்பத்துடன் வந்து பட்டாசுகள் வாங்கிச் சென்றனர்.
மக்களின் வசதிக்காக குழந்தைகளுக்கான கம்பி மத்தாப்பு, தரைச் சக்கரம், புஸ்வானம், சாட்டை போன்ற பட்டாசு ரகங்கள் தனியாகவும், பெரியவர்கள் விரும்பி வெடிக்கும் வெடிகள் தனி ஸ்டால்களிலும் விற்கப்பட்டன.
ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனை பிரபலமாகியிருப்பதால் தீவுத்திடல், ராயப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலம் பட்டாசுகள் வாங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பேரங்காடிகளைப் போல் டிராலி வசதியும் இருந்தது.
மழையால் பட்டாசு விற்பனை பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். இருந்தாலும், சென்னையில் நேற்று மேகமூட்டமாகக் காணப்பட்டது. லேசான தூறல் மட்டுமே இருந்ததால் பட்டாசு விற்பனை பாதிக்கப்படவில்லை.
சில்லறையாக பட்டாசுகள் வாங்குவதைவிட, கிஃப்ட் பாக்ஸ்கள் வாங்குவதில் மக்கள் ஆர்வமாகஇருந்தனர். நேற்று, தீபாவளிக்கு முதல் நாள் என்பதால், வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு பட்டாசுகளை தள்ளுபடி விலையில் விற்பனை செய்தனர்.
“குழந்தைகளைக் கவரும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள ஃபயர் பென்சில், டாம் அண்ட் செரி, டோரா, கோல்டன் ஸ்பைடர், ரோல் கேப் போன்றவையும், பெரியவர்கள் அதிகம் விரும்பும் 5 ஆயிரம், 10 ஆயிரம் வாலா, ராக்கெட் ரகங்கள், சரவெடிகள் விற்பனை அதிகமாக இருந்தது" என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ரவி என்பவர் கூறும்போது, “பணப் புழக்கம் குறைவு காரணமாக பட்டாசு வாங்குவதற்கு ஒதுக்கும் தொகையைப் பாதியாகக் குறைத்துள்ளேன். பசுமைப் பட்டாசுகள் விலை அதிகமாக இருக்கும் என நினைத்தோம். அந்த அளவுக்கு விலை உயர்வு இல்லாதது ஆறுதலாக இருக்கிறது" என்றார்.