Published : 27 Oct 2019 09:31 AM
Last Updated : 27 Oct 2019 09:31 AM

வடகிழக்கு பருவமழையால் தீவிரமடையும் டெங்கு, தொற்றுநோய்களை தடுக்க சுகாதாரத் துறை அறிவுரை: அவசர தொலைபேசி எண்கள் வெளியீடு

சி.கண்ணன் 

சென்னை

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வருவதால் டெங்கு மற்றும் தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்க பொதுமக்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு, தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்கம் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. ஏற்கெனவே, மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சலால் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்குவின் தீவிரத்தால் உயிரிழப்புகளும் நிகழ்கின்றன. இந்நிலையில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. டெங்கு காய்ச்சல் மற்றும் தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்க சுகாதாரத் துறை பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையே பொதுமக்கள், மருத்துவமனைகள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு தேவையான அறிவுரைகளை தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்கம் வழங்கியுள்ளது.

பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

பொதுமக்கள் சுத்தமான தண்ணீரை மட்டும் குடிக்க வேண்டும். கொதிக்க வைத்த தண்ணீரை குடிப்பது மிகவும் நல்லது. தொற்றுநோய் வராமல் தடுக்க சோப்பு போட்டு அடிக்கடி கைகளை தண்ணீரில் கழுவ வேண்டும். ஆழ்துளைக் கிணறுகள், தரைமட்ட குடிநீர் தொட்டிகள், திறந்தவெளி கிணறுகள் ஆகியவற்றை சுத்தம் செய்த பின்னரே அவற்றின் நீரை பயன்படுத்த வேண்டும். குடிநீரில் சரியான அளவில் குளோரின் கலந்து பயன்படுத்த வேண்டும். இயற்கை உபாதைகளுக்கு கழிவறையை மட்டுமே பயன்படுத்த வேண்டும். காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். எந்தப் பகுதியிலாவது காய்ச்சல், வயிற்றுப்போக்கு அதிகமாக இருந்தாலோ அல்லது தொற்றுநோய்கள் குறித்த சந்தேகம் இருந்தாலோ 044-29510500, 044-29510400, 9444340496, 8754448477 மற்றும் 104 ஆகிய எண்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை

மருத்துவமனைகளில் கண்டிப்பாக ஜெனரேட்டர் வசதி இருக்க வேண்டும். மருத்துவமனைக்குள் மழைநீர் வந்தாலும் பாதிப்பு ஏற்படாதவாறு தரையில் இருந்து 5 அடி உயரத்தில் ஜெனரேட்டரை வைக்க வேண்டும். ஜெனரேட்டரை இயக்குவதற்குத் தேவையான டீசலை இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும். அவசர காலத்தில் நோயாளிகளை வேறு மருத்துவமனைக்கு மாற்றுவதற்கான வசதிகள் இருக்க வேண்டும். மாத்திரை, மருந்துகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், செயற்கை சுவாசக் கருவிகள் அனைத்தும் போதிய அளவு வைத்திருக்க வேண்டும். சுகாதாரத் துறை ஊழியர்கள்குப்பை மற்றும் அழுகிய பொருட்களை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் உடனடியாக அகற்ற வேண்டும். டயர், உடைந்த மண்பாண்டங்கள், தேங்காய் சிரட்டைகள், பெயின்ட் டப்பாக்கள், தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் கட்டுமான இடங்களில் தேங்கும் தண்ணீர் போன்றவற்றில் கொசுக்கள் உற்பத்தியாகக் கூடும். அதனால், அந்தப் பொருட்களை உடனடியாக அகற்ற வேண்டும். எங்கேயாவது விலங்குகள், பறவைகள் இறந்து கிடப்பதைக் கண்டால் உடனடியாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிக்கு தகவல் தெரிவித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அவற்றை ஆழப்பள்ளம் தோண்டி புதைத்து, அந்த இடத்தில் பிளீச்சிங் பவுடரை நன்றாக தூவ வேண்டும். இவ்வாறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x