Published : 27 Oct 2019 09:28 AM
Last Updated : 27 Oct 2019 09:28 AM

வல்லிபுரம் பாலாற்று தடுப்பணை கட்டுமான பணிகள் நிறைவு: நவம்பர் மாதம் மக்களுக்கு அர்ப்பணிக்கிறார் முதல்வர்

கோ.கார்த்திக்

திருக்கழுக்குன்றம்

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வல்லிபுரம் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வந்த தடுப்பணையின் கட்டுமான பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, வரும் நவம்பர் மாதம் தடுப்பணையை மக்களுக்கு முதல்வர் பழனிசாமி அர்ப்பணிக்க உள்ளதாக பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள், பாலாற்றின் குறுக்கே பல்வேறு பகுதிகளில் தடுப்பணைகள் அமைக்க பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும், ஆற்றுப்படுகையில் கடல்நீர் உட்புகுந்து பாலாற்றின் கரையோரத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களின் விளைநிலங்களில் ஊடுருவியதால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் பல்வேறுகட்ட போராட்டங்களுக்குப் பிறகு, வல்லிபுரம் கிராமப் பகுதியில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க, தமிழக அரசு கடந்த 2018-ம் ஆண்டு ரூ.30.90 கோடி நிதி ஒதுக்கியது. இதன்பேரில், கடந்த ஜனவரி மாதம் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. மழைக்காலத்துக்குள் தடுப்பணையின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்யும் வகையில் பணிகள் துரிதமாக நடைபெற்றன. இதனால், வடகிழக்கு பருவ மழையால் செங்கல்பட்டுவை அடுத்த பாலாற்றில் பெருக்கெடுத்து வரும் தண்ணீரை சேமிக்க வல்லிபுரம் தடுப்பணை தயாராக உள்ளது.

பாலாற்றில் நீரோட்டம் ஏற்பட்டால் தடுப்பணையில் இருந்து சுமார் 5 கி.மீ தொலைவுக்கு ஆற்றுப்படுகையில் தண்ணீர் தேங்கும் நிலை உள்ளதால், பாலாற்றில் இருந்து ஏரிகளுக்கு பிரிந்து செல்லும் கால்வாய்கள் மூலம் 30-க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டு, ஏரிகள் நிரம்புவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால்,ஏரிகளுக்கான நீர்வரத்து கால்வாய்கள் தூர்வாரப்படாததால், கால்வாய்களை தூர்வாரி சீரமைக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக, கடந்த ஆக.10-ம் தேதி ‘இந்துதமிழ்’ நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.

இதையடுத்து, பாலாற்றில் இருந்து பிரிந்து செல்லும் ஏரிக்கால்வாய்களை தூர்வாரி சீரமைக்க திட்டமதிப்பீடு தயாரித்துஅரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்நிலையில், தடுப்பணையின் பணிகள் நிறைவு பெற்றுள்ளதால் அணையை வரும் நவம்பர்மாதம், தமிழக முதல்வர் மக்களுக்குஅர்ப்பணிக்க உள்ளதாக பொதுப்பணித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து, பாலாறு கீழ்வடி நிலக்கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: வல்லிபுரம் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் தடுப்பணையின் கட்டுமானப் பணிகள் 95 சதவிகிதம் நிறைவடைந்துள்ளன. இரு கரையோரங்களில் 6 மதகுகளுடன் தடுப்பணை அமைக்கப்பட் டுள்ளதால், ஆற்றில் வரும் தண்ணீரை நீரோட்டத்துக்கு ஏற்ப திறந்துவிட முடியும். தடுப்பணையில் தண்ணீர் தேக்குவதன் மூலம் இரு கரையோரங்களில் உள்ள சுமார் 80 கிராமங்களின் நிலத்தடி நீர்மட்டம் உயரும். தற்போது மழை பெய்து வருவதால், ஆற்றில் ஆங்காங்கே நீரோட்டம் ஏற்பட்டு தடுப்பணையை நோக்கி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. முதல்வர்அணையை மக்களுக்கு அர்ப்பணிக்கும்போது, தடுப்பணையில் தண்ணீர் நிரம்பிவிடும் என்ற நம்பிக்கையில் உள்ளோம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x