Published : 27 Oct 2019 09:16 AM
Last Updated : 27 Oct 2019 09:16 AM

சென்னையில் தீபாவளியை முன்னிட்டு துணிக் கடைகளில் குவிந்த பொதுமக்கள்: நீண்ட நேரம் காத்திருந்து பொருட்களை வாங்கிச் சென்றனர்

சென்னை

தீபாவளியை முன்னிட்டு சென்னையில் நேற்று காலை முதலேதுணிக் கடைகளில் பொதுமக்கள்அதிக அளவில் குவிந்தனர். தியாகராய நகர் மற்றும் வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் நீண்ட நேரம் காத்திருந்து துணிகளை வாங்கிச் சென்றனர்.

தீபாவளி பண்டிகை வந்துவிட்ட நிலையில் நேற்று காலை சென்னையில் உள்ள பல்வேறு துணிக் கடைகள் வழக்கத்தை விட ஒரு மணிநேரம் முன்னதாகவே 9 மணி அளவில் கடைகளை திறந்தன. பொதுமக்களும் காலை முதல்அதிக அளவில் துணிக் கடைகளில் குவிந்தனர். அதன் காரணமாக தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள பெரிய கடைகளில் மக்கள் நீண்ட நேரம் காத்திருந்து துணிகளை வாங்கி சென்றனர்.

அந்த கடைகளில் ஆயத்த ஆடைகள் வாங்குவதில் பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டினர். மேலும் தியாகராய நகரில் உள்ள பல்வேறு சாலைகளில் மக்கள் தலைகளாக காட்சியளித்தன.

இதுமட்டுமின்றி, சாலையோர கடைகளில் விற்கப்பட்ட ஆடைகள், அணிகலன்கள் மற்றும் காலணிகளை வாங்க பெண்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டினர். அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபடுத்தப்பட்டனர். தியாகராய நகர் பகுதியில் அதிக அளவில் மக்கள் குவிந்திருந்ததால் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வட சென்னையில்...

வட சென்னையில் உள்ள துணிக் கடைகளிலும் நேற்று காலை முதலே மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. குறிப்பாக பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள எம்.சி சாலையில் உள்ள துணிக் கடைகள் மற்றும் சாலையோர துணிக் கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது. அப்பகுதியில் பெரிய கடைகளுக்கு இணையாக சாலையோர கடைகளிலும் சிறப்பாக வியாபாரம் நடைபெற்றது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீஸார் ஈடுபட்டனர். மேலும் பெரம்பூர் - மாதவரம் நெடுஞ்சாலை, மூலக்கடை போன்ற பகுதிகளில் உள்ள துணிக் கடைகளிலும் நேற்று மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

புரசைவாக்கத்தில்....

புரசைவாக்கம் பகுதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புரசைவாக்கம் நெடுஞ்சாலை மற்றும் தானா தெரு பகுதியில் உள்ள துணிக் கடைகளுக்கு ஏராளமான பெண்கள் வந்து, புத்தாடைகளை வாங்கிச் சென்றனர். சாலையோரக் கடைகளிலும் பொதுமக்கள் அதிக அளவில் பொருட்களை வாங்கினர். அங்கு ஆடைகள் மட்டுமல்லாது தள்ளுவண்டிக் கடைகளில் விற்கப்பட்ட வளையல் உள்ளிட்ட அலங்காரத்துக்கு தேவையான பொருட்களையும் வாங்க பெண்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டினர். கடந்த சில நாட்களாக பகல்நேரங்களில் மழை பெய்யாததால்சாலையோரக் கடைகளில் விற்பனை அமோகமாக நடைபெற்றது.

இது சாலையோர வியாபாரிகளை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. மேலும் சாலையோர கடைகளில் மாவிலை தோரணம், வாழைக் கன்று, கரும்பு உள்ளிட்ட பூஜை பொருட்களும் விற்கப்பட்டன. மேலும் அப்பகுதியில் பொதுமக்கள்அதிக அளவில் குவிந்ததால், அவர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்வதற்கான ஆலோசனைகளை ஒலிப்பெருக்கி மூலமாக போலீஸார் வழங்கி வந்தனர். அங்கு தற்காலிக உயர் கோபுரங்கள் அமைத்தும் கண்காணித்து வந்தனர். துணி எடுக்க வந்த பெண்கள் பலர், மருதாணி வைத்துக்கொள்வதிலும் அதிக ஆர்வம் காட்டினர்.

தாம்பரம், குரோம்பேட்டையில்..

பெரிய கடைகள் உள்ள குரோம்பேட்டை, பள்ளிக்கரணை பகுதியில் மக்கள் கூட்டம் நேற்று அலைமோதியது. தாம்பரம், பல்லாவரம், மேடவாக்கம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் குடும்பத்துடன் வந்து ஆடைகள், வீட்டு உபயோக பொருட்கள், அணிகலன்கள் மற்றும் பட்டாசுகளை வாங்கிச் சென்றனர். கடந்த சில நாட்களாக மந்தமாக காணப்பட்ட தாம்பரத்திலும் நேற்று விற்பனை களைக்கட்டியது.

பொதுமக்களை கவரும் வகையில் ஆடைகள், சாலையோர கடைகளில் விலை குறைவாக விற்கப்பட்டதால், கிராமப்புற ஏழைஎளிய மக்கள் சாலையோர கடைகளில் அதிக அளவில் பொருட்களை வாங்கினர். இதேபோல் பெண்களுக்கான அழகு சாதன பொருட்கள், வளையல், ஜிமிக்கி, பொட்டு போன்ற அலங்கார பொருட்களும் சாலையோர கடைகளில் விற்பனை செய்யப்பட்டது. நேற்று தீபாவளி ஷாப்பிங் காரணமாக கடைவீதிகள், பேருந்து நிலையங்களில் கட்டுக்கடங்காத கூட்டம் அலை மோதியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x