

சென்னை
பயன்படுத்தப்படாத ஆழ்துளைக் கிணற்றைக் கண்டறிந்து மூட வேண்டும் என்கிற விழிப்புணர்வுப் பிரச்சாரம் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது. முகநூலில் ஒருவர் ஆழ்துளைக் கிணறு குறித்துப் பதிவிட அதை உடனடியாக மூடியுள்ளனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த நிலையில் 22 மணி நேரத்தைக் கடந்தும் குழந்தையை மீட்க முடியாமல் மீட்புப் பணி தொடர்கிறது. 70 அடி ஆளத்திலிருந்து 80 அடி ஆழம் நோக்கி குழந்தை சென்றுவிட்டது.
தற்போது ஆழ்துளைக் கிணற்றுக்குப் பக்கத்தில் இன்னொரு ஆழ்துளைக் கிணற்றைத் தோண்டி மீட்க முடிவெடுத்துள்ளனர். தமிழகம் தாண்டி இந்திய அளவில் கவனத்தை ஈர்த்துள்ள இந்த மீட்புப் பணி நெட்டிசன்கள் கவனத்தை ஈர்த்து பல்வேறு ஹேஷ்டேகுகளை ட்ரெண்டாக்கி வருகின்றனர். ஆழ்துளைக் கிணறுகள் பயன்படாவிட்டால் மூடவேண்டும் என்கிற கோஷம் வலுக்கிறது.
முகநூலில் ஒருவர் இட்ட பதிவு:
“எந்த நாட்டுலயாவது இந்த மாதிரி வருசா வருசம் ஆழ்துளைக் கிணற்றுல குழந்தை விழுந்து இறந்த சம்பவம் நடக்குதா?
ஒவ்வொரு தடவை குழந்தை ஆழ்துளைக் கிணற்றுல விழுந்த சம்பவம் நடக்கும்போதும் கிணற்றை மூடுங்கன்னு பாதுகாப்பா மூடி போடுங்கன்னு அரசாங்கம் ஒவ்வொரு தடவையும் விழிப்புணர்வுப் பிரச்சாரம் பண்ணாலும் அதைக் கண்டுக்கவே மாட்டானுங்க.
இவங்க ஆழ்துளைக் கிணறு 300 அடி, 500 அடி தோண்டுவானுங்க. தண்ணீர் கிடைக்கலைன்னு அப்படியே மூடாம போய்டுவானுங்க. விளையாடப் போகிற குழந்தை தவறி விழுந்தா கருவி கண்டுபிடிக்கலன்னு குறை சொல்லிட்டுக் கெளம்பி வருவானுங்க.
5-10 லட்சம் ரூபாய் செலவு பண்ணி போர் போடுகிறவனுங்க 500-1000 ரூபாய் கொடுத்து மூடி போட்டு போர மூட மாட்டாங்க. இந்த மாதிரி மக்களோட அலட்சியம் இன்னும் எத்தனை குழந்தைங்க உயிரை காவு வாங்கப் போகுதோ” என ஒருவர் பதிவிட,ஜெயமோகன் சுந்தரராஜன் என்பவர் மூடப்படாமல் இருந்த ஆழ்துளைக் கிணறு குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.
இதனையடுத்து முகநூல் நண்பர்கள், ஊராட்சி செயலர் உள்பட பலர் இணைந்து ஆழ்துளைக் கிணற்றைத் தற்காலிகமாக மூடி நடவடிக்கை எடுத்தனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியம் லட்சுமிபுரம் கால்நடை மருத்துவமனை எதிரே அங்கன்வாடி மையம் பின்புறம் பயன்படாத ஆழ்துளைக் கிணறு மூடப்படாமல் இருந்தது. இது குறித்தே ஜெயமோகன் சுந்தரராஜ் தனது முகநூலில் பதிவு செய்தார். இதுதொடர்பான புகைப்படங்களையும் அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார். உங்கள் அருகாமையில் ஏதேனும் இதுபோன்று மூடப்படாத ஆழ்துளைக் கிணறு இருந்தால் அதனை முதல் வேலையாக முறைப்படி மூடி நீங்களும் நடவடிக்கை எடுக்கலாம் எனக் கேட்டுக்கொண்டார்.
தனது பதிவின்மூலம் பயன்படுத்தாமல் விடப்பட்ட ஆழ்துளைக் கிணற்றை மூடியதற்கு நன்றி தெரிவித்து அவரது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவு:
” “தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியம் லட்சுமிபுரம் கால்நடை மருத்துவமனை எதிரே அங்கன்வாடி மையம் பின்புறம் பயன்படாத ஆழ்துளைக் கிணறு மூடப்படாமல் இருந்தது குறித்து முகநூலில் பதிவிட்டேன். அதைப் பார்த்ததும் துரிதமாகச் செயல்பட்டு தற்காலிகமாக மூடப்பட்டுவிட்டது.
உடனே செயல்பட்ட லட்சுமிபுரம் ஊராட்சி செயலர் மற்றும் முகநூல் நண்பர்கள் வெங்கடேசன் அனைவருக்கும் நன்றி” என முகநூலில் பதிவிட்டுள்ளார்.
இதேபோன்று அவரவர்கள் அவர்கள் பகுதியில் உள்ள பயன்படுத்தப்படாத ஆழ்துளைக் கிணற்றை கண்டறிந்து மூடும் நடவடிக்கையில் இறங்கினால் அதுவே சரியான நடவடிக்கையாக அமையும்.