

ஆழ்துளைக் கிணறு தோண்டுபவர்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய 7 விதிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்த பிரிட்டோ ஆரோக்கியராஜ்- கலாராணி தம்பதியின் மகன் சுஜித் வில்சன் (2). வயலில் பாசனத்துக்காக கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் தந்தை தோண்டிய ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தார்.
அவரை பல்வேறு வகைகளிலும் மீட்கத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆழ்துளைக் கிணற்றை மூடுவதில் பெரும்பாலானோர் முறையான விதிமுறைகளைப் பின்பற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது.
ஆழ்துளைக் கிணற்றைத் தோண்டுவதிலும் மூடுவதிலும் கடைபிடிக்க வேண்டிய விதிகள் என்னென்ன?
* முதலில் ஆழ்துளைக் கிணறு தோண்டுவதற்கு முன்பாக, மாவட்ட நிர்வாகத்திடம் தகவல் அளிக்க வேண்டும்.
* முறையான பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றியே கிணறு தோண்ட வேண்டும்.
* தோண்டும்போது உணவு, ஓய்வு ஆகியவற்றுக்கு இடைவெளி விடும்பட்சத்தில், ஆழ்துளைக் குழியைத் தற்காலிகமாக மூடி வைப்பதை உறுதி செய்யவேண்டும்.
* தண்ணீர் கிடைக்காத பட்சத்தில் முறையாக அதை மூட வேண்டும்.
* நிலம் பழைய நிலைக்குத் திரும்பும் வகையில் சீர்படுத்த வேண்டும்.
* ஆழ்துளை அமைக்கப்பட்ட பகுதியை உறுதியான இரும்புத் தகடு கொண்டு மூடவேண்டும். மூடியைக் கொண்டு மூடும்பட்சத்தில் நட்டு, போல்ட் ஆகியவை கொண்டு இறுக்கமாக மூடியைக் கட்ட வேண்டும்.
* ஆழ்துளைக் கிணறு தோண்டும் பணி முடிந்த பிறகும் மாவட்ட நிர்வாகத்துக்குத் தகவல் அளிக்க வேண்டும்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து யாராவது உயிரிழந்தால், அந்தக் கிணறு அமைந்துள்ள இடத்தின் உரிமையாளரும், அதனைத் தோண்டிய நபருமே பொறுப்பேற்க வேண்டும்.