

உடனடியாக சட்டமன்றம் கூட்டுவது தொடர்பான அறிவிப்பு வரவில்லை என்றால் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் எழுதியுள்ள ஃபேஸ்புக் பதிவில், ''கடந்த ஏப்ரல் 1-ம் தேதி ஒத்தி வைக்கப்பட்ட தமிழக சட்டமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்று பல முறை கோரிக்கை வைத்தும் இதுவரை கூட்டப்படவில்லை.
இதனால் அனைத்து துறைகளின் மானியக் கோரிக்கைகளும் அவையில் வைத்து விவாதிக்கப்படாமல், அதற்குரிய அனுமதி பெறப்படாமல் ஒட்டு மொத்த மாநில அரசு நிர்வாகமே இன்று ஸ்தம்பித்து நிற்கிறது. இதனால் மக்கள் நலத்திட்டங்கள் பாதிக்கப்படுகிறது.
அரசு நிர்வாகத்தின் மூன்று தூண்களில் ஒன்றான சட்டமன்றத்தைக் கூட்டாமலும், மக்கள் பிரச்சினைகளை விவாதிக்காமலும் இருப்பதால், அதிமுக அரசு ஜனநாயகப் படுகொலையை அரங்கேற்றியுள்ளது. அரசின் முக்கியத் திட்டங்கள் குறித்த கொள்கை முடிவு எடுப்பதில் ஏற்பட்டுள்ள இந்த மோசமான தேக்க நிலைமையை நீக்குவதற்கு சட்டமன்றத்தை உடனே கூட்ட வேண்டும் என்று அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
உடனடியாக சட்டமன்றம் கூட்டுவது தொடர்பான அறிவிப்பு வரவில்லை என்றால் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.