ஆழ்துளைக் கிணற்றில் சுஜித்: இரவு முழுவதும் உறங்காமல் மீட்புக் குழுக்களுக்கு உதவும் 9-ம் வகுப்பு மாணவர்

பச்சை நிற டி-ஷர்ட்டில் மாதேஷ்
பச்சை நிற டி-ஷர்ட்டில் மாதேஷ்
Updated on
1 min read

திருச்சி

குழந்தை சுஜித்தை மீட்கும் பணியில் 9-ம் வகுப்பு மாணவர் ஒருவர் ஆர்வத்துடன் நேற்றிலிருந்து உதவி செய்து வருகிறார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே 26 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் நேற்று மாலை தவறி விழுந்த 2 வயதுக் குழந்தை சுஜித்தை உயிருடன் மீட்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தகவல் அறிந்து மாநில அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், என்.நடராஜன், எஸ்.வளர்மதி, மணப்பாறை எம்எல்ஏ சந்திரசேகர், மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, எஸ்பி ஜியாவுல் ஹக் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தி வருகின்றனர்.

குழந்தையை மீட்க பிரத்யேகக் கருவியை கண்டுபிடித்த மணிகண்டன் தலைமையிலான குழு, மாநிலப் பேரிடர் மீட்புக்குழு, தேசியப் பேரிடர் மீட்புக்குழு என 8 குழுக்கள் இணைந்து குழந்தை சுஜித்தை மீட்க முயற்சி செய்து வருகின்றன.

இந்நிலையில், திருச்சி குத்தூரை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர் மாதேஷ் என்பவர், நேற்றிரவு 8 மணி முதல் இன்று வரை மீட்புக்குழுக்களுக்கு பல்வேறு விதமான உதவிகளை ஆர்வத்துடன் செய்து வருகிறார். இதன்மூலம், மாதேஷ் அப்பகுதி மக்களிடையே கவனம் பெற்றுள்ளார்.

மாணவர் மாதேஷ்

மீட்புக்குழுவில் உள்ள டேனியல் என்பவருடன் சம்பவ இடத்திற்கு வந்த மாதேஷ், படிப்புடன் இத்தகைய மீட்புப் பணிகளில் டேனியலுடன் ஆரம்பம் முதலே உதவி செய்து வந்துள்ளார்.

பச்சை நிற டி-ஷர்ட் அணிந்திருக்கும் மாதேஷை, ஆரம்பத்தில் பொதுமக்களில் ஒருவர் என நினைத்து, போலீஸாரும், அதிகாரிகளும் விரட்டவே, அதன்பிறகுதான் அவர் மீட்புக்குழுவில் ஒருவர் எனத் தெரியவந்தது. இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கரே நேரடியாக மாதேஷிடம் விசாரித்தார்.

நேற்றிரவு முதல் உதவி செய்து வரும் மாதேஷ், இன்று வரை உறங்காமல், மீட்புக்கருவிகளைப் பயன்பாட்டுக்கு ஏற்றாற் போல் தேர்ந்தெடுத்துக் கொடுப்பது, ஆழ்துளைக் கிணற்றுக்குள் கேமராவை சரியாகப் பொருத்துவது என பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in