

திருச்சி
குழந்தையை மீட்பதற்காக துக்கமான சூழலிலும், அவரது தாயே துணிப்பை தைத்து மீட்புக் குழுவினரிடம் கொடுத்துள்ளார். எனினும், துணிப்பை மூலம் குழந்தையை மீட்கும் முயற்சியும் தோல்வியில் முடிந்தது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே 26 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் நேற்று மாலை தவறி விழுந்த 2 வயது குழந்தை சுஜித்தை உயிருடன் மீட்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தகவல் அறிந்து மாநில அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், என்.நடராஜன், எஸ்.வளர்மதி, மணப்பாறை எம்எல்ஏ சந்திரசேகர், மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, எஸ்பி ஜியாவுல் ஹக் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கோவை கற்பக விநாயகம் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளரான ஸ்ரீதர் தலைமையிலான மீட்புக்குழுவினர், ஆழ்துளைக் கிணற்றில், குழந்தைக்கு அடியில் துணிப்பையை வைக்க முனைந்தால் பையுடன் குழந்தையை மேலே கொண்டு வரலாம் என, யோசனை தெரிவித்தனர்.
இதனையடுத்து, துணிப்பை தைக்க அவர்கள் ஆட்களைத் தேடியபோது, சுஜித்தின் தாயார் கலைராணியே தையல்காரர் எனத் தெரியவந்தது.
இதன்பின், "என் பிள்ளைக்காக நானே துணிப்பை தைத்துக் கொடுக்கிறேன்," எனக்கூறிய கலைராணி, தன் மகன் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சோகத்திலும் துணிப்பையைத் தைத்து மீட்புக்குழுவினரிடம் கொடுத்தார்.
எனினும், அந்தப் பையை குழந்தை சுஜித்துக்குக் கீழ்ப்பகுதியில் திணிக்க முடியாமல் போனது. மண் சரிந்து குழந்தையின் மேல் விழுந்ததால், அம்முயற்சியை மீட்புக்குழுவினர் கைவிட்டனர்.