

சென்னை
அஜாக்கிரதை, அலட்சியம் ஆகியவை பொறுப்பற்ற சமூகத்தின் தொடர் பண்புகள் ஆகிவிட்டன என, நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே 26 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் நேற்று மாலை தவறி விழுந்த 2 வயது குழந்தை சுஜித்தை உயிருடன் மீட்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தகவல் அறிந்து மாநில அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், என்.நடராஜன், எஸ்.வளர்மதி, மணப்பாறை எம்எல்ஏ சந்திரசேகர், மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, எஸ்பி ஜியாவுல் ஹக் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மீட்புப் பணியின் போது, குழந்தை சுஜித் 26 அடியிலிருந்து 70 அடிக்கு விழுந்துவிட்டான். இதனால், குழந்தையை மீட்கும் பணி தாமதமாகி வருகிறது.
இந்நிலையில், இது போன்ற குற்றங்கள் தொடராமல் இருக்க கடும் தண்டனையே தீர்வு என, நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, விவேக் இன்று (அக்.26) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "சுஜித் மீண்டு வர வேண்டும். நம்மால் முடிந்தது கண்ணீர் மல்கும் பிரார்த்தனைகள் மட்டுமே. அஜாக்கிரதை, அலட்சியம் இவை இந்த பொறுப்பற்ற சமூகத்தின் தொடர் பண்புகள் ஆகிவிட்டன. இதுபோன்ற குற்றங்கள் தொடராமல் இருக்க கடும் தண்டனையே தீர்வு," எனப் பதிவிட்டுள்ளார்.