தீபாவளிக்கு லாபகரமான விலை கிடைக்காததால் பொங்கலை எதிர்நோக்கும் வெல்லம் தயாரிக்கும் விவசாயிகள் : கடந்த 6 மாதங்களாக விலையில் மாற்றம் இல்லை என வியாபாரிகள் கருத்து
வ.செந்தில்குமார்
வேலூர்
தீபாவளி பண்டிகைக்கு வெல்லத்தின் விலையில் எதிர்பார்த்த அளவுக்கு ஏற்றம் இல்லாததால் பொங்கலை எதிர்நோக்கி வெல்லம் தயாரிக்கும் கரும்பு விவசாயிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் நெல், கரும்பு, வாழை பிரதான விவசாயமாக இருந்த நிலையில் பருவநிலை மாற்றத்தால் மழைநீர் குறைந்து நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாக குறைந்துவிட்டது. இதன் காரணமாக, நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்களின் சாகுபடி பரப்பளவு ஆண்டுதோறும் குறைந்துகொண்டே வருகிறது. வேலூர் மாவட்டத்தில் கரும்பு விவசாயம் அதிகளவில் இருக்கும் என்ற காரணத்தாலே வேலூர், ஆம்பூர் மற்றும் கேதாண்டப்பட்டி என 3 இடங்களில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த 3 ஆலைகளிலும் கடந்த சில ஆண்டுகளாகவ பிழிதிறன் அளவைக் காட்டிலும் குறைந்தளவே வரத்து உள்ள தால் ஆண்டுக்கு 3 முதல் 4 மாதங்கள் வரை மட்டுமே இயங்கி வருகின்றன.
சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்காத கரும்பு விவசாயிகள் பலர் வெல்லம் தயாரித்து மண்டிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதன் மூலம் விவசாயிகளுக்கு போதிய அளவுக்கு வருமானம் கிடைத்து வருகிறது. ஆலைகளுக்கு கரும்பை கொடுத்து பணத்துக்காக பல மாதங்கள் காத்திருக் காமல் வெல்லத்தை வேலூரில் உள்ள மண்டிகளில் விற்று வந்தனர். அதிலும், வேலூர் மாவட்டத்தில் தயாரிக்கப்படும் வெல்லத்துக்கு பிற மாவட்டங்களில் நல்ல விலை இருக்கும் என்பதால் வெல்லம் தயாரிப்பு லாபகரமான தொழிலாகவே இருந்து வந்தது. கடந்த சில ஆண்டுகளாக வெல்லம் தயாரிப்பு தொழிலும் பாதிக்கத் தொடங்கியுள்ளது. வெல்லம் ஆலை ஆடுபவர்களுக்கு அரசின் இலவச மின்சாரத்தை பயன்படுத்த முடியாத நிலையில் பலர் கரும்பு பயிரிடுவதையும் நிறுத்திவிட்டனர்.
கே.வி.குப்பம் அருகே கவசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் கூறும்போது, ‘‘வெல்லம் தயாரிப்பதை பல தலைமுறைகளாக தொழிலாகவே செய்து வருகிறோம். கரும்பு பற்றாக்குறை இருந்தால் கர்நாடக மாநிலத்தில் இருந்து வாங்கியும் வெல்லம் தயாரிப்போம். தற்போது, வெல்லம் கிலோவுக்கு ரூ.40-45 வரைதான் கிடைக்கிறது. இது, செய்கின்ற வேலைக்கும் தொழிலாளர்களுக்கு கூலி வழங்கவும் போதுமானதாக இருப்பதில்லை என்பதால் வெல்லம் தயாரிக்கலாமா என்றே யோசிக்க வேண்டியுள்ளது. கடந்த ஆண்டு கிலோ வெல்லம் ரூ.50 வரை விற்கப்பட்டது. இப்போது விலை இல்லாததால் வரும் பொங்கலுக்கு விலை இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அதுவரை சிலர் உற்பத்தியையும் குறைத்துவிட்டனர். சிலர் கரும்பை வெட்டாமலேயே வைத்துள் ளனர்’’ என்றார்.
வேலூர் வெல்லம் மண்டி வியாபாரி ராஜேந்திரன் என்பவர் கூறும்போது, ‘‘வேலூர் மாவட்டம், தருமபுரி, கள்ளக் குறிச்சி, ஓமலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தெல்லாம் வேலூர் மண்டிகளுக்கு வெல்லம் வரத்து இருந்தது. ஒரு காலத்தில் இங்கிருந்து பிஹார், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு வெல்லம் ஏற்றுமதியாகும். அந்த நிலை இப்போது மாறிவிட்டது. கேரளாவுக்கு மட்டும் வெல்லத்தை அனுப்புகிறோம். அங்கு அல்வா, பஞ்சாமிர்தம் தயாரிக்கவும் காஃபிக்கும் பயன்படுத்துகின்றனர்.
வெல்லம் வியாபாரம் ஆண்டுக்கு 6 மாதங்கள் வரை என்றுதான் இருந்தது. காலம் மாறிவிட்டதால் ஆண்டு முழுவதும் வரத்தும் விற்பனையும் ஒரே மாதிரியாக இருப்பதால் விலையிலும் பெரிய மாற்றம் இல்லாமல் இருக்கிறது. கடந்த 6 மாதங்களாகவே கிலோ ரூ.50 விலையிலே வெல்லம் விற்பனை யாகிறது. கேரளாவுக்கு செல்லும் வெல்லம் ரூ.35-க்கு விற்பனையாகிறது.
பொதுமக்கள் இடையிலும் வெல்லத்தின் நுகர்வு 50 சதவீதத்தில் இருந்து 75 சதவீத மாக அதிகரித்துள்ளது. தேவையும் இருந்து கொண்டே இருப்பதால் இருப்பு வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்ய முடிய வில்லை. ஒரு மாதம் இடைவெளியிலேயே விநாயகர் சதுர்த்தி, ஆயுதபூஜை, தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகைகள் வந்து விட்டதால் பல வீடுகளில் ஏற்கெனவே வாங்கிய வெல்லம் கையிருப்பில் இருக்கும். எனவே, வெல்லம் விற்பனையில் பெரிய மாற்றம் இல்லாததால் விலையிலும் மாற்றம் இல்லை. தீபாவளி என்றால் வெல்லத்தின் தேவை அதிகமாக இருக்கும். ஆனால், இந்தாண்டுக்கு அந்தளவுக்கு இல்லை. கடந்த ஆண்டு தீபாவளி சமயத்தில் கிலோ வெல்லம் ரூ.60-க்கு விற்பனையானது’’ என்றார்.
