

பெரம்பலூர்
மனநலம் பாதிக்கப்பட்டு குடும்பத்தி னரை விட்டுப் பிரிந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர், 10 ஆண்டுகளுக்குப் பிறகு குணமடைந்த நிலையில் அவரது குடும்பத்தினருடன் இணைந்தார்.
ஆந்திர மாநிலம் சித்தூர் அருகேயுள்ள தொட்டிபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்ன ரெட்டியப்பா(36). இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்டு குடும்பத்தை விட்டுப் பிரிந்து ஊர் ஊராகச் சுற்றிக்கொண்டிருந்தார்.
கடந்த 23.3.2015 அன்று பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில் திரிந்துகொண்டிருந்த இவரை பெரம்பலூர் வேலா கருணை இல்லத்தைச் சேர்ந்தவர்கள் மீட்டு, இல்லத்தில் தங்க வைத்து உரிய மனநல சிகிச்சை அளித்தனர். மேலும், அவருக்கு விவசாயம் செய்வதற்கான தொழிற்பயிற்சியும் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், தொடர் மனநல சிகிச்சையால் குணமடைந்த சின்னரெட்டியப்பா, தனது சொந்த ஊர், மனைவி, குடும்பத்தினர் குறித்து கருணை இல்லத்தினரிடம் தெரிவித்தார். இதையடுத்து, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலம் சின்னரெட்டியப்பாவை அவரது குடும்பத்தினருடன் சேர்க்க ஏற்பாடுகள் நடைபெற்றன. அவரது குடும்பத்தினரிடம் சின்ன ரெட்டியப்பா குறித்த தகவலைத் தெரிவித்து அவர்கள் பெரம்பலூருக்கு வரவழைக்கப்பட்டனர்.
இதையடுத்து, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும் சார்பு நீதிபதியுமான வினோதா முன்னிலையில், சின்ன ரெட்டியப்பா அவரது மனைவி நிலம்மா மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.