

கும்பகோணம்
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பாஜகவுடன் இணைய உள்ளதாக வெளிவரும் தகவல்கள் அனைத் தும் வதந்தியே என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித் தார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நேற்று செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது:
நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி என்பது, மத்திய, மாநில அரசுகளின் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு மக்கள் அளித்த அங்கீகாரம்தான். திமுக போன்ற எதிர்க்கட்சிகளின் தவறான பொய்ப் பிரச்சாரம் இடைத்தேர்தல் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது.
ஓரிரு மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு, உள்ளாட்சியில் நல்லாட்சி ஏற்படுத்த இந்த கூட்டணியின் வெற்றிக்காக தமாகா பாடுபடும்.
தமாகா சார்பில் வரும் நவம்பர் மாதம் சென்னை, திருச்சியில் உள்ளாட்சித் தேர்தல் பிரதிநிதிகள் மாநாடு நடத்தப்படும். இதன் மூலம் வெற்றி பெற வாய்ப்புள்ள இடங்கள் குறித்து விவாதித்து அந்த இடங்களை கூட்டணியிடம் இருந்து பெற்று போட்டியிட முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
கூட்டணிக் கட்சி என்ற அடிப்படையில் அவர்கள் விடுத்த அழைப்பை ஏற்றே தஞ்சாவூரில் கடந்த மாதம் பாஜக சார்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் தமாகா நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பாஜகவுடன் இணைய உள்ளதாக சமீப காலமாக வெளிவரும் தகவல்கள் அனைத்தும் வதந்தியே.
பயிர்க் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் உரிய இழப்பீட்டுத் தொகையை வங்கிக் கணக்கில் வரவு வைக்காமல், விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு நேரடியாக அவர்களிடம் வழங்க வேண்டும்.
கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கும் அறிவிப்பை பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.