ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை சுஜித்துக்காக பிரார்த்தனை: ட்ரெண்டாகும்  ஹேஷ்டேகுகள் 

ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை சுஜித்துக்காக பிரார்த்தனை: ட்ரெண்டாகும்  ஹேஷ்டேகுகள் 
Updated on
1 min read

மணப்பாறை

ஆழ்துளைக் கிணற்றில் நேற்று மாலை தவறி விழுந்த 2 வயது குழந்தை சுஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும் என வலியுறுத்தி ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் தங்கள் பிராத்தனைகளை பதிவிட்டு வருகின்றனர்.

மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்த தம்பதி பிரிட்டோ ஆரோக்கியராஜ்- கலாராணி. இவர்களது மகன் சுஜித் வில்சன் (2). பிரிட்டோ ஆரோக்கியராஜ் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவர் தனது வீட்டின் அருகில் உள்ள வயலில் பாசனத்துக்காக கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் ஆழ்துளைக் கிணறு தோண்டியுள்ளார். ஆனால், தண்ணீர் கிடைக்காததால் அந்த ஆழ்துளைக் கிணற்றை மூடிவிட்டார். கைவிடப்பட்ட அந்த ஆழ்துளைக் கிணற்றைச் சுற்றி தற்போது மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக பெய்த மழையில் ஆழ்துளைக் கிணற்றில் மூடியிருந்த மண் உள்வாங்கியது. அது தெரியாமல் அந்தப் பகுதியில் நேற்று மாலை 5.30 மணியளவில் விளையாடிக் கொண்டிருந்த சுஜித் வில்சன் எதிர்பாராதவிதமாக ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தார்.

தகவல் அறிந்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி தலைமையில் மணப்பாறை, திருச்சி ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்புத் துறையினரும், வருவாய்த் துறையினரும் விரைந்து சென்று குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இவர்களுடன் மருத்துவக் குழுவினரும், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களும் ஒருங்கிணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். குழந்தை அவ்வப்போது கைகளை அசைத்த நிலையில் இருப்பதால், குழாய் மூலம் ஆழ்துளைக் கிணற்றுக்குள் ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. மேலும் கேமரா மூலம் குழந்தையின் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

ஆழ்குழாய் குழியில் விழுந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வரும் பிரத்யேக குழுவினர் சேலம், மதுரை, நாமக்கல் ஆகிய இடங்களில் இருந்து வந்து குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
மீட்பு பணி நடைபெறும் இடத்தில் ஏராளமான பொதுமக்கள் குவிந்துள்ளனர். அவர்களும் குழந்தை சுஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும் என பிராத்தித்து வருகின்றனர்.
சமூகவலைதளங்களிலும் பலரும் குழந்தை சுஜித்துக்காக பிராதித்து பதிவிட்டு வருகின்றனர். ஆழ்துளைக் கிணற்றில் நேற்று மாலை தவறி விழுந்த 2 வயது குழந்தை சுஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும் என வலியுறுத்தி ட்விட்டரில் பல்வேறு தரப்பினரும் தங்கள் பிரார்த்தனைகளை பதிவிட்டு வருகின்றனர். #savesurjeet, #prayforsurjith,#SaveSujith ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்ரண்டாகி வருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in