

நாகர்கோவில்
கன்னியாகுமரி மாவட்ட விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 400 பேர் சூறைகாற்றால் கரைசேர முடியாமல் கோவா பகுதியில் ஆழ்கடலில் தவிக்கின்றனர்.
அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி இருப்பதாக, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், சூறைகாற்று, கனமழை நிலவும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் எனவும், ஆழ்கடலுக்குச் சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்புமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல், தேங்காய்ப்பட்டணம், முட்டம் ஆகிய மீன்பிடி துறைமுகங்களில் இருந்து கடலுக்குச் சென்ற மீனவர்கள் கரை திரும்பிய வண்ணம் உள்ளனர்.
இதுதவிர, ஆழ்கடலில் வெவ்வேறு மாநில கடல் எல்லைப் பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள், அருகிலுள்ள துறைமுகங்களில் கரைசேர அறிவுறுத்தப்பட்டனர். இதைத்தொடர்ந்து, கோவா மாநிலத்தில் தம்மாம் தீவு, குஜராத்தில் வேராவேல் துறைமுகம், மஹாராஷ்டிர மாநிலத்தில் தேவிகாட் மற்றும் ரத்னகிரி மீன்பிடி துறைமுகங்கள், கர்நாடக மாநிலம் கார்வார், மால்பி துறைமுகங்கள், கேரள மாநிலம் கொச்சி, முனப்பம் துறைமுகங்களில், 600-க்கும் மேற்பட்ட குமரி மாவட்ட விசைப்படகுகளில், 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கரைசேர்ந்துள்ளனர். இவர்கள் தங்கள் உறவினர்களுக்கு இத்தகவலை உறுதிப்படுத்தினர். கடைசியாக, குமரியைச் சேர்ந்த எல்ஷடாய், ஸ்டார் ஆப் தி ஷீ ஆகிய இரு விசைப்படகுகளில், 32 மீனவர்கள் நேற்று மாலையில் கோவாவில் கரைசேர்ந்ததாக தகவல் கிடைத்துள்ளது.
ஆனால், தேங்காய்பட்டணம் மற்றும் கொச்சியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற, குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 30 விசைப்படகுகள் இதுவரை கரை திரும்பவில்லை. இந்த, 30 விசைப்படகுகளிலும், கன்னியாகுமரி, ராமநாதபுரம், கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் கேரளா, மும்பையைச் சேர்ந்த 400 மீனவர்கள் உள்ளனர்.
இதுதொடர்பாக, ஏற்கெனவே பிற மாநிலங்களில் கரைசேர்ந்த மீனவர்கள் கூறும்போது, ``அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், ஆழ்கடலில் பலத்த சூறைகாற்று வீசிவருகிறது. படகுகளை கரையை நோக்கி செலுத்த முடியாமல் மீனவர்கள் தவிக்கின்றனர்” என தெரிவித்துள்ளனர்.
கரைசேர முடியாமல் தவிக்கும் 400 மீனவர்களையும், கடலோர காவல்படை மூலம் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் மத்திய அரசுக்கு, தெற்காசிய மீனவ தோழமை அமைப்பு மற்றும் மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.