

சென்னை
அரபிக் கடலில் உருவாகியுள்ள 'க்யார்' புயலால் தமிழகத்துக்குப் பாதிப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி படிப்படியாக வலுப்பெற்று தற்போது 'க்யார்' புயலாக மாறியுள்ளது. இப்புயலால் தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ந.புவியரசன் கூறியதாவது:
அரபிக் கடலில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது 'க்யார்' புயலாக வலுப்பெற்றுள்ளது. அது தற்போது கிழக்கு மத்திய அரபிக் கடலில், மும்பையிலிருந்து தெற்கு மற்றும் தென்மேற்கு திசையில் 370 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக மாற வாய்ப்புள்ளது. இப்புயல் அடுத்த 5 நாட்களில் வடக்கு நோக்கி நகர்ந்து, மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் ஓமன் நாட்டு கடற்கரையை நோக்கி நகர வாய்ப்புள்ளது. எனவே இந்த புயலால் தமிழகத்துக்கு பாதிப்பில்லை. மழை கிடைக்கவும் வாய்ப்பில்லை.
வங்கக் கடலில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஒடிசா மாநிலத்தில் கரையை கடந்து வலுவிழந்துவிட்டது. எனவேஅடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தீபாவளிக்குப் பிறகு புதிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சிஉருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ் வாறு உருவானால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கக் கூடும்.
இவ்வாறு புவியரசன் கூறினார்.