Published : 26 Oct 2019 08:23 AM
Last Updated : 26 Oct 2019 08:23 AM

பயணிகளின் புகார்களுக்கு உடனடி தீர்வு காண ஆர்பிஎப் ரோந்து பணிக்கு கைகொடுக்கும் செக்வே வாகனங்கள்: மேலும் 7 ரயில் நிலையங்களில் விரிவுப்படுத்த முடிவு

சென்னை

ரயில் நிலையங்களில் பயணிகளின் புகார்களுக்கு உடனடியாக சென்று தீர்வு காணும் வகையில் ஆர்பிஎப் ரோந்து பணிக்கு வழங்கப்பட்டுள்ள செக்வே வாகனங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன. மேலும், சென்னை எழும்பூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட 7 ரயில் நிலையங்களில் விரிவுப்படுத்தப்படவுள்ளது.

ரயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, புதுடெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் புதிய பாதுகாப்பு அம்சங்களை ரயில்வே அறிமுகம் செய்து வருகிறது.

இதற்கிடையே, ரயில் நிலையங்களின் உள்பகுதியில் பாதுகாப்பு ரோந்து பணிகளை விரைவாக மேற்கொள்ளவும், சம்பவ இடங்களுக்கு விரைந்து செல்லும் வகையில் செக்வே வாகனங்களை (தானியங்கி ஸ்கூட்டர் தொழில்நுட்பத்தில்) ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.

நாடுமுழுவதும் பெரிய ரயில் நிலையங்களில் முதல்கட்டமாக 200-க்கும் மேற்பட்ட செக்வே வாகனங்கள் படிப்படியாக அறிமுகம் செய்யப்பட்டு, சோதனை முயற்சியில் இயக்கப்படுகின்றன.

இதற்கிடையே, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடந்த 2-ம் தேதி ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு 6 செக்வே வாகனங்கள் வழங்கப்பட்டன. ஒரு வாகனத்தின் விலை சுமார் ரூ.80 ஆயிரமாகும்.

சிறப்பு அம்சங்கள்இதுதொடர்பாக ரயில்வே பாதுகாப்புப் படையினர் (ஆர்பிஎப்) கூறும்போது, ‘‘பேட்டரியில் இயங்கும் இந்த ஸ்கூட்டர் தானியங்கி, சமநிலைப்படுத்திய தொழில்நுட்பத்துடன் இருப்பதால், இதில் பயணிப்பவர் கீழே விழுவதற்கான வாய்ப்பில்லை. இது சென்சார் மூலமாக கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த ஸ்கூட்டரில் கைப்பிடியை பிடித்துக் கொண்டு எளிமையாக இயக்கும் வகையில் இருக்கிறது.

மேலும், நின்றுகொண்டே இயக்கும் விதத்தில் வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 2 சக்கரங்கள் மட்டுமே பொருத்தப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டர், மணிக்கு 4 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின், அனைத்து நடைமேடைகளுக்கும் இந்த ஸ்கூட்டரில் விரைவாகவும், எளிதாகவும் சென்று வர முடிகிறது. ஒரு முறை பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 8 கிமீ தூரம் பயணிக்க முடியும்.

பயணிகள் தரப்பில் இருந்து புகார் வந்தால், ரயில் நிற்கும் பகுதி மற்றும் நடைமேடைக்கு உடனடியாக செல்வதற்கு வசதியாக இருக்கிறது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரோந்து பணிகளை விரைவாக செய்ய முடியும். பாதுகாப்பு படையினரும் சோர்வடையமாட்டார்கள். எனவே, இந்த வகை வாகனங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது’’ என்றனர்.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, ‘‘சென்னை சென்ட்ரலில் ரோந்து பணி மேற்கொள்ள சமீபத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள செக்வே வாகனங்கள் ரயில்வே பாதுகாப்பு படையினர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

ரோந்து பணிகளை விரைவாக மேற்கொள்ளவும் வசதியாக இருப்பதாக ஆர்பிஎப் படையினர் தெரிவித்துள்ளனர். எனவே, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தைத் தொடர்ந்து, சென்னை எழும்பூர், திருச்சி, மதுரை, நெல்லை, சேலம், கோவை மற்றும் திருவனந்தபுரம் ரயில் நிலையங்களிலும் இந்த ரக வாகனங்களை படிப்படியாக அறிமுகப்படுத்தவுள்ளோம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x