Published : 26 Oct 2019 08:15 AM
Last Updated : 26 Oct 2019 08:15 AM

பஞ்சமி நிலப் பிரச்சினையில் யாரும் பாதிக்காத வகையில் தீர்வு: அரசுக்கு கொமதேக கோரிக்கை

ஈரோடு 

பஞ்சமி நில பிரச்சினைகளை தமிழக அரசு ஆராய்ந்து, யாரும் பாதிப்படையாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கொமதேக கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து கொமதேக மாநில பொதுச் செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை:சுதந்திரத்துக்கு பின்னர் அரசின் சார்பாக பட்டியல் இன சமுதாய மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட நிலமே பஞ்சமி நிலம் என அழைக்கப்படுகிறது. எந்த உபயோகமும் இல்லாமல், தரிசாக கிடந்த அந்த நிலங்களை, தங்களுடைய பண தேவைகளுக்காக நில உரிமையாளர்கள் பெரும்பாலும் விற்றுவிட்டனர். அந்த நிலங்களை வாங்கியவர்கள் கடுமையாக உழைத்து, பாசன நிலங்களாக மாற்றி விவசாயம் செய்து வருகின்றனர். வாங்கிய நிலங்கள் அந்தந்த சார்-பதிவாளர் அலுவலகத்தில் பணம் கொடுத்து கிரையம் பெறப்பட்டிருக்கிறது.

தற்போது 50 ஆண்டுகளுக்கு முன்னால் பதிவு அலுவலகங்களில் செய்யப்பட்ட கிரையங்கள் செல்லாது என்றும், அந்த நிலங்களை அரசாங்கத்தில் ஒப்படைக்க வேண்டுமென்றும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அதை எதிர்த்துதான், பல இடங்களில் நீதிமன்றத்துக்கு சென்று இருக்கிறார்கள்.

வாங்கிய ஏழை விவசாயிகளுக்கு அது பஞ்சமி நிலம் என்று தெரியாது. உரிய விலை கொடுத்து கிரையம் செய்து வாங்குகின்ற நிலங்களின் மீது எந்த சந்தேகமும் அவர்களுக்கு வரவில்லை. பஞ்சமி நிலத்தை வேறு சமுதாயத்தவர் வாங்கக்கூடாது என்றால், பதிவு அலுவலகங்களில் பதிவு செய்யாமல் நிராகரித்து இருக்க வேண்டும். அதையெல்லாம் செய்யாமல், தரிசு நிலத்தை பண்படுத்தி விவசாய நிலங்களாக மாற்றி பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகின்ற விவசாயிகளை நிலத்தை காலி செய்யுங்கள் என்று சொல்வது சரியானதல்ல.

தமிழக அரசு பஞ்சமி நில பிரச்சினைகளை ஆராய்ந்து யாரும் பாதிப்படையாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பஞ்சமி நில பிரச்சினை என்று கிளப்பிவிட்டு, சாதி பிரச்சினையை உருவாக்க முயற்சிப்பவர்கள் அடையாளம் காணப்பட வேண்டும். அரசியல் லாபத்துக்காகவும் இது பயன்படுத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x