

சென்னை
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாததாகி விடும் என சமூகவலைதளங்களில் பரவிவரும் வதந்தியை நம்ப வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாட்ஸ்அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று பரவி வருகிறது. அதில், வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் ஆயிரம் ரூபாய் நோட்டை மத்திய ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது. அதை முன்னிட்டு, தற்போது புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாததாகி விடும்.
எனவே, பொதுமக்கள் தங்கள் வங்கிக் கணக்கில் 2 ஆயிரம் ரூபாய்நோட்டுகளை ரூ.50 ஆயிரம் வரை மட்டுமே 10 தினங்களுக்குள் மாற்ற முடியும். அதன் பிறகு மாற்ற முடியாது. எனவே இப்போதி ருந்தே பொதுமக்கள் 2 ஆயிரம்ரூபாய் நோட்டுகளை மாற்றி விடவேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது, “மீண்டும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வெளியிடுவது குறித்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் எங்களுக்கு வரவில்லை. அவ்வாறு அறிமுகப்படுத்தினாலும் தற்போது புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாததாகி விடாது. அதுகுறித்து மத்திய அரசு முன்பு பணமதிப்பு நீக்கத்தை அறிவித்தது போல அறிவித்தால் தான் அவை செல்லாததாகும். அதுவரை அவை புழக்கத்தில் இருக்கும். எனவே, இதுபோன்ற வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம்” என்றனர்.